குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, December 20, 2024

விஜய் சேதுபதியின் விடுதலை 2 விமர்சனம்

மனிதர்கள் சூழலுக்குக் கட்டுப்பட்டவர்கள். மீறவே முடியாது. கொள்கைகள், கோட்பாடுகள், அறம் போன்றவைகளெல்லாம் வாழ்க்கையின் சூழலுக்கு முன்பே தோற்றுப் போகும். எதையும் முழுமையாகக் கடை பிடிக்க முடியாது.

தந்தை பெரியார் காலத்தில் - வயதான காலத்தில் கூட மூத்திரப்பையைத் தூக்கிக் கொண்டு, ஒவ்வொரு மீட்டிங்குக்கும் சென்றார். அவர் நினைத்திருந்தால் வீட்டில் இருந்திருக்கலாம். ஆனால் அவர் ஒவ்வொரு நாளும் ஓடிக் கொண்டே இருந்தார். அவரின் கொள்கைப் பிடிப்பால், அவர் கொண்டிருந்த பேரறிவால் - தந்தை பெரியார் என அழைக்கப்படுகிறார். இவரைப் போன்றோரைப் பார்ப்பது அரிது.

தமிழ் நாட்டில் - அரசியல்தலைவர்களை சினிமாவுக்குள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாத ஆபாச படங்களில் நடித்துக்கொண்டிருந்த ஒருவர் சி.எம் ஆகணுமாம். இவரின் பின்னால் ஒரு கூட்டம் ஓடிக் கொண்டிருக்கிறது. 

தலைவர்களை அடையாளம் காணக்கூடாது. அவர்கள் மக்களுக்காக தெருவில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். எத்தனையோ நபர்கள் - நந்தினி (குடிக்கு எதிராய் போராடிக் கொண்டிருக்கிறார்) போன்றோர்கள் மக்களுக்காக பலன் எதிர்பாராமல் போராடுகிறார்கள். இவரைப் போன்றோர்களை மறந்து போகிறோம். ஜிகினாவுக்குள்ளும், விளக்கின் வெளிச்சத்துக்குள்ளும் தேடிக் கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள்.

தமிழ் சினிமாவில் அடையாளப்படுத்தக் கூடிய நேர்மையாளர் என்று பெயரெடுத்தவர் விஜய் சேதுபதி.

பிக்பாஸ் சீசன் 8 - விஜய் சேதுபதி தொகுப்பாளர். ஆரம்ப கட்டத்தில் அவர் போட்டியாளர்களுடன் நிகழ்த்திய உரையாடல்கள் - ஹீரோ தொனியில் இருந்தது. நீங்கள் வெறும் தொகுப்பாளர். படத்தின் ஷூட்டிங்கில் பேசுவது போல எங்களிடம் பேசினால் - வெச்சு செய்வோம் என செய்தார்கள். அவர்களுக்கு ஏற்கனவே ஷூட்டிங் அனுபவமெல்லாம் இருக்குமென்பதால் விஜய் சேதுபதி திக்கித் திணறி படாதபாடு பட்டார். கடந்த இரு வாரங்களாக ஓரளவு பரவாயில்லை.

காக்கையை மயில் என சொல்லி விட முடியாது. காக்கை - காக்கை தான்.

தமிழ்நாடு அரசாங்கம் ஆன்லைன் ரம்மியைத் தடை செய்து அரசாணையை வெளியிட்டு இருக்கிறது. அந்த அரசாணையை நீதிமன்றங்கள் (????) தடை செய்து வைத்திருக்கின்றன. ஒன்றிய அரசோ கண்டும் காணாதது போல.

மக்களின் நலன் மீதும், அவர்களின் மீதும் அக்கறை கொண்டவரைப் போல சோஷியல் மீடியாக்களில் பொய்களைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் விஜய் சேதுபதியைப் பற்றி. அவரின் பேச்சுகள் அவ்வாறு இருக்கின்றன.

பிக்பாஸ் 8 ஸ்பான்சர் - ஏ23 ரம்மி விளையாட்டு. குறைந்த பட்ச அறமும் இன்றி விஜய் டிவி இந்த நிகழ்ச்சிக்கி ஏ23 ரம்மி நிறுவனத்திடமிருந்து ஸ்பான்சர் பெற்றிருக்கிறது. எண்டமோல்சைன் இந்தியா நிறுவனம்தான் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர். நாங்கள் அல்ல என்று கைகழுவிக் கொள்ள முடியாது.

சாமானியனிடம் தென்படும் அறம் கூட விஜய் டிவிக்கும், எண்டமோல்ஷைன் இந்தியாவுக்கும், நிகழ்ச்சியின் தொகுப்பாளராய் இருக்கும் விஜய சேதுபதிக்கும் இல்லை.

விஜய் சேதுபதி விடுதலை 2 படம் இன்று ரிலீஸ். இவருக்கு மக்கள் செல்வன் என்ற பட்டப் பெயர் வேறு. 

வெட்கமாயில்லையா விஜய் சேதுபதி உங்களுக்கு?

ஆன்லைன் ரம்மியால் பலர் செத்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் உங்களின் கண்ணுக்குத் தெரியவில்லை. 

குறைந்த பட்சம் விஜய் டிவியிலாவது பேசி இருக்கலாமே?

இப்படிக் கேட்கத் தோன்றுகிறது அல்லவா உங்களுக்கு?

கேட்க முடியாது. நாம் அந்த இடத்தில் இல்லை. நம் குரல் அவர்களுக்கு கேட்காது. கேட்டாலும் கேட்காகதது போல நடிப்பார்கள். 

இதுதான் உலகம். விஜய் டிவிக்கும், எண்ட்மோல்சைன் இந்தியா நிறுவனத்துக்கும், விஜய் சேதுபதிக்கும் - நிகழ்ச்சியின் வாயிலாக - விளம்பரதாரர்கள் வழியாக வரும் பணம் மட்டுமே முக்கியம். மக்கள் செல்வனுக்கும் பணம் மட்டுமே முக்கியம்.

இவர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். படித்தால் மட்டும் போதாது. கொஞ்சம் அறமும் வேண்டும். 

உடனே ஆ...! விஜய் சேதுபதியால் ஒன்றும் செய்ய இயலாது என்று சப்பைக் கட்டு கட்ட வந்து விடுவார்கள். விடுதலைப் படத்தின் புரமோஷனுக்காகத்தான் தொழிலாளி - முதலாளி டாஸ்க் வைக்கப்பட்டது. அதன் பிறகு அப்படத்தின் புரமோஷனுக்காக நடிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்தார்கள்.

விஜய் சேதுபதி இதைப் பற்றிப் பேசி எளிதாக கடந்து போனார். இவருக்குத் தெரியாது. இவரால் முடியாது என்றெல்லாம் நினைக்கத் தோன்றவில்லை. ஆனால் செய்யும் செயலின் பலன் அப்படி இருக்காது. விதையை விதைத்தவர் தான் அறுக்க வேண்டும்.

ஏ23 விதைத்துக் கொண்டிருக்கும் விதைகளின் பலனை விஜய் சேதுபதியும், விஜய் டிவியும், எண்டமோல்ஷைன் இந்தியாவும் அறுத்தே தீரும்.

மிச்சம் சொச்சம் இல்லாமல் வெச்சு செய்யும் அறம். பார்த்துக் கொண்டே இருங்கள். அது தான் நம்மால் முடியும்.

வளமுடன் வாழ்க.


Tuesday, December 10, 2024

மோசமடையும் இந்தியப் பொருளாதாரம் - கவனம்

2024-2025 ஆம் நிதியாண்டில் தற்போது நாட்டின் உற்பத்தியாது 7.2 சதவீதத்திலிருந்து 6.6 சதவீதமாக குறைந்து உள்ளது. இரண்டாம் காலாண்டில் வளர்ச்சி 5.4 சதவீதமாக சரிந்து உள்ளது. இது 7 சதவீத இலக்கை விட வெகுவாக குறைவான உற்பத்தி. 

பணவீக்கம் 4.5 சதவீதத்திலிருந்து 4.8  சதவீதமாக உயர்ந்துள்ளது. பண வீக்கத்தால் மக்கள் செலவு அதிகம் செய்ய வேண்டி இருக்கும்.

ரிசர்வ் வங்கி, வங்கிகளின் கட்டாய இருப்பு விகிதத்தை (CRR) 4.5 சதவீதத்திலிருந்து 4 சத வீதமாக குறைத்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ்  வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 6.5 சதவீதத்தில் வைத்துள்ளது. 

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து பணத்தை திரும்ப பெறுவதால் ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக 1.3 சதவீதம் சரிந்துள்ளது. இதனை சமாளிக்க, வெளிநாட்டு நாணய வைப்புகளுக்கான (FCNR) வட்டி விகித உச்சவரம்பை 500  அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது இந்தியா. 

காய்கறிகள், பால், எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை 15-20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அதிகாரப்பூர்வமாக 4.8 சதவீதம் என்று கூறப்படும் பணவீக்கம், சாமானிய மக்களின் வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. இந்த பணவீக்க மதிப்பீட்டில் இந்திய அரசு சரியான மதிப்பினை வழங்கவில்லை என இடதுசாரி அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

பணவீக்கத்தின் பாதிப்பு சாமானிய மக்களின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கிறது. காய்கறிகளில் முதற் கொண்டு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வால் குறைவாக வாங்குகிறார்கள். உணவுப் பொருட்களின் விலை எப்போதும் இல்லாத அளவில் உயர்வடைந்திருக்கிறது என்பது சாமானிய மக்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

இதையெல்லாம் மூடி மறைக்க முடியாது. ஆனால் சாமானியர்களின் சம்பளமோ, வருமானமோ உயர்வடையவில்லை. எதற்கெடுத்தாலும் ஜி.எஸ்.டி வரி விதிப்பதால் மக்களின் சேமிப்பில் துண்டு விழுகிறது.

வளமுடன் வாழ முடியாது. இனி சாமானியர் வாழ்க்கை பெரும் அவலத்துக்குட்பட்டு விடும் ஆபத்து கண் முன்னே நிற்கிறது.

அரசு விலைவாசியைக் கட்டுப்படுத்தி சாமானியர்களைக் காப்பாற்ற வேண்டும்.

Saturday, November 30, 2024

நிலம் (119) - சொத்து வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று

இந்தியாவில் இருக்கும் சிவில் சட்டம் நூலாம்படை போல போல சிக்கலான ஒன்று எந்த நாட்டிலும் இருக்காது. ஒவ்வொரு மாநிலத்துக்கும், மதத்துக்கும் ஒவ்வொரு வகையான சட்டம். இவைகளைப் படித்து, அறிந்து, புரிந்து அதற்கேற்ப ஆலோசனை வழங்குவது என்பது இருட்டுக்குள் பேனாவைத் தேடுவது போல.

சிவில் சட்டம் - மதங்களுக்கு எனத் தனித்தனியாக இருக்கிறது. அதன் வாரிசுகள்  மற்றும் வாரிசுகளுக்கு இடையேயான பாகங்கள் குறித்த பல விதமான சட்டப்பிரிவுகள் உள்ளன. ஆனால் சிக்கலான வாரிசுகளுக்கிடையேயான பாகங்கள் பற்றிய சட்டங்களைத் தேடினால் கிறுகிறுத்து விடுகிறது.

அதே போல சமீபத்தில் ஒரு சிக்கலான சொத்துப் பாகத்தைப் பற்றிய ஆலோசனை கேட்கப்பட்டது. 

என்னவென்றால் ஒருவருக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் இருக்கின்றனர். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி - கணவரிடமிருந்து விலகி இருந்த ஒரு பெண்ணுடன் தனியான உறவு இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக குழந்தையும் பிறந்துள்ளது என்கிறார்கள். ஆனால் முறைப்படியான பதிவுகள் ஏதுமில்லை. ரத்த உறவு இருக்கிறது. 

ஆவணத்தின் மூலமாக உறவினை நிரூபிக்க முடியாது என்ற நிலையில் இந்தச் சொத்தினை ஒருவர் கிரையம் பெற வேண்டுமென்கிறார்.

இதற்குச் சட்டத்தில் லீகலான வழி உண்டா? 

ஆவணச் சான்றுகளின் மூலம் வாரிசை நிரூபிக்க முடியாவிட்டால் சொத்தில் பங்கு கிடைக்காது. எதிர்காலத்தில் சிக்கல் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என ஆலோசனையை வழங்கினேன். இது சரியா? தவறா? என்றெல்லாம் பார்க்க முடியாது. 

சட்டம் என்ன சொல்கிறது? அதை தான் அறம், தர்மம் இவைகளைத் தாண்டி யோசிக்க வேண்டி இருக்கிறது.

எல்லாவற்றையும் விட ஒரு முக்கியமான அவசியமான விஷயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

பூமி சொத்து என்பது ஒரே இடத்தில் தான் இருக்கும். அதன் உரிமையாளர்கள் மாறுவார்கள். எத்தனையோ உயிர்கள் பிறந்து வளர்ந்து செத்துப் போகின்றார்கள். ஆனால் சொத்து அதே இடத்தில் தான் இருக்கும்.

ஒரு சொத்து வாங்கும் போது வெகு கவனமாக ஆராய்ந்து வாங்க வேண்டும். இல்லையெனில் அழிவைத்தான் சந்திக்க நேரிடும். 

எம்.ஜி.ஆருக்கு திருச்சியில் ஒரு சொத்து வாங்கிய பிறகுதான் வீழ்ச்சி ஏற்பட்டது என்பார்கள். அதன் பிறகு அவர் இறந்தும் போனார்.

அதே போலத்தான் ஜெயலலிதா அம்மையாருக்கும் என்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவர் மூனாறில் ஒரு சொத்து வாங்கினார். அதன் பிறகு அவர் அமைச்சராக இருக்கவே முடியவில்லை.

ஒரு பிரபல அரசியல்வாதியின் சகோதரர் கோவையில் சொத்து வாங்கினார். அதன் பிறகு அவர் ஆளே இல்லாமல் போய் விட்டார். இப்படி சொத்துக்கள் என்பவை பலருக்கு நன்மையைத் தந்தாலும், சிலருக்கு துன்பத்தைத் தந்து விடும்.

புரிந்து கொள்வதற்காக ஒரு விஷயத்தைச் சொல்கிறேன்.

அந்தக் காலத்தில் திருமணத்துக்குப் பெண் பார்க்கப் போகும் போது பெரிய அதாவது வயதில் அனுபவம் வாய்ந்த பெரியவர்களை அழைத்துச் செல்வார்கள்.

ஆணின் உடல் வாகையையும், பெண்ணின் உடல் வாகையையும் பார்த்தாலே குடும்பத்துக்கு ஆகுமா, இல்லை கூத்தடிக்க ஆகுமா எனக் கண்டுபிடித்து விடுவார்கள். ஆண்களின் உடலும், பெண்களின் உடலும் கட்டுக்குலையாமல் இருக்கிறதா எனப் பார்ப்பார்கள். கட்டுகுலைந்த உடல் என்றால் தெரிந்து விடும். கட்டுக்குலைந்து உடலமைப்பைக் கொண்டவர்களுக்கு பல அனுபவங்களால் உடல் குலைந்து போய் இருக்கும். இப்போது பலர் நல்ல அனுபவசாலிகள் தான் வாழ்க்கைக்கு ஏற்றவர்கள் என்று கதை பேசிக் கொண்டிருப்பார்கள். மனிதர்களின் மனம் என்பது விசித்திரமானது. அதன் தன்மை ரகசியமானது. சரி விஷயத்துக்கு வருகிறேன்.

பூமி வாங்கும் முன்பு நான்கெல்லைகளைச் சுற்றி வர வேண்டும். பூமிக்குள் சென்ற உடனே மனதுக்கு நிம்மதியாக இருக்கிறதா? மனது ஆர்ப்பரிக்கிறதா?எனப் பார்க்க வேண்டும். ஒரு முறை அல்ல, இரண்டொரு முறை இதைச் செய்ய வேண்டும். மெல்லிய நுண்ணுணர்வு உங்களுக்குள் காட்டிக் கொடுக்கும்.

வாஸ்து பார்க்காதீர்கள். அது பக்கா பிசினஸ். வாஸ்து படி கட்டிய வீடுகளில் வசிப்போருக்கு எந்த நன்மையும் இதுவரையிலும் கிடைக்கவில்லை என்பது வரலாறு.

பலரும் பல செய்திகளைச் சொல்வார்கள். அதையெல்லாம் மனதில் இருந்து விரட்டி விடுங்கள். சொத்து வாங்கும் முன்பு அது உங்களுக்கு உகந்ததா என அறிந்து கொள்ளுங்கள். ஒத்து வராது எனத் தோன்றினால் விட்டு விடுங்கள்.

விலை ஏறும், நல்ல லாபம் கிடைக்கும் என்றெல்லாம் தோன்றும். ஆனால் அதன் பின்னால் வரக்கூடிய அபத்தங்கள் உங்கள் வாழ்வைச் சீரழித்து விடும். சொத்து இருக்கும். ஆனால் நிம்மதி?

நிம்மதி தொலைத்த பலரும் பெரும் சொத்துக்களை வைத்திருக்கிறார்கள். ஆனால் அதனால் அவர்களுக்கு கிடைத்த பலனோ கொடூரம். என்னிடம் பல உண்மையான ஆதாரங்களுடன் கூடிய நிகழ்வுகள் இருக்கின்றன. அதையெல்லாம் எழுத முனைந்தால் மனிதர்கள் மீதான நம்பிக்கைகள் தகர்ந்து போய் விடும்.

வளமுடன் வாழ்க...!


Tuesday, November 26, 2024

மழையை வெறுக்கும் சென்னை மக்கள்

மனித குலத்திற்கு இயற்கை வழங்கிய ஓர் அடிப்படையான பொருள் தண்ணீர். பயிர்வளம், இயற்கைவளம், விலங்குவளம் என்பனவற்றைச் செழிக்கச் செய்வதுடன் மனிதனின் அன்றாடத் தேவையில் தவிர்க்க இயலாத ஒன்றாகத் தண்ணீர் இடம் பெற்றுள்ளது.

மழையின் வாயிலாகவும், ஆறுகளில் இருந்தும், நிலத்தினுள் இருந்தும் மனித சமூகம் நீரைப் பெற்று வருகிறது. இயற்கையாக ஓடும் காட்டோடைகளில் இருந்தும், ஆறுகளில் இருந்தும் மட்டுமே மனித சமூகம் தண்ணீரைப் பெற்று வந்தது. நீரைத் தேக்கிவைக்கவும், திசை திருப்பவும், பூமியின் உள்ளே இருந்து வெளிக் கொணரவும் படிப்படியாகக் கற்றறிந்தபோதுதான் மனிதசமூகம் வளர்ச்சி பெற்றது. இம்முயற்சியில் ஏற்பட்ட வெற்றியே சமூகத்திற்கு முன்னேற்றத்தை வழங்கியது. நாகரிகம், பண்பாடு என்பனவற்றை வளர்த்தெடுத்தது. உலகின் தொன்மையான நாகரிகங்கள் ஆற்றங்கரை நாகரிகங்களாகவே இருந்துள்ளன. 

பரிபாடலில் வையை ஆறும், சிலப்பதிகாரத்தில் காவிரி ஆறும் அழகுற இடம்பெற்றுள்ளன. 

‘கான்யாறு’ ‘விரிபுனல்’ என்று ஆறுகளுக்குப் பெயரிட்டனர். 

தன்போக்கில் ஓடிக்கொண்டிருக்கும் நீரைத் தேக்கி வைக்கும் முறை தமிழக வரலாற்றில் பழமையான ஒன்று. 

இத்தகைய நீர்நிலைகள், குளம், இலஞ்சி, பொய்கை, ஏரி, வாவி, கூவல், குழி எனப் பல்வேறு பெயர்களில் பண்டைத் தமிழர்கள் அழைத்துள்ளனர். 

கிணறு வெட்டுதல் தொடர்பான நூல் ‘கூவநூல்’ எனப்பட்டது. இந்நூல் படித்து பயிற்சி பெற்றோரை ‘கூவநூலோர்’எனப்பட்டனர். 

வேளாண்மைப் பெருக்கத்திற்கு, காடுகளை அழிப்பதும் குளங்களை வெட்டுவதும் அவசியமென பண்டைத் தமிழர்கள் அறிந்திருந்தனர்.


நிலன் நெளிமருங்கின் நீர்நிலை பெருகத்

தட்டோரம்ம இவன் தட்டோரே

தள்ளாதோர் இவண் தள்ளாதோரே  (புறநானூறு 28 - 30) 

எனப் புலவர் புலவியனார், பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடியுள்ளார். 

நிலம் எங்கெங்கு பள்ளமாக இருக்கிறதோ அங்கெல்லாம் நீர் நிலைகள் அமையும்படி கரை அமைத்த மன்னர்களே இவ்வுலகில் என்றென்றும் அழியாப் புகழ்பெற்று விளங்குவர் என்பதாகும் இப்பாடலின் அர்த்தம்.


நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு 

எனத் திருக்குறளில் திருவள்ளுவரும் நீரின் முக்கியத்துவத்தை எடுத்து இயம்பியிருக்கிறார்.


பொய்யா எழிலி பெய்விட நோக்கி

முட்டைக் கொண்டு வற்புலஞ் சேரும்

சிறு நுண் ணெறும்பின் - (புறநானூறு 173)

என பாடலில் எறும்புகள் தம் முட்டைகளை எடுத்துக்கொண்டு சற்று மேட்டு நிலத்துக்குச் சென்றால் மழை பெய்யவுள்ளதாக பொருள் என மழை வரும் காலத்தைப் புறச்சூழலை வைத்து கணித்திருக்கிறார்கள்.


துய்அவிழ் பனிமலர் உதிர வீசித்

தொழின்மழை பொழிந்த பானாட் கங்குல்

எறிதரைத் திவலை தூஉம் சிறுகோட்டுப்

பெருங்குளம் காவலன் போல,

அருங்கடி அன்னையும் துயில் மறந்தனளே (அகநானூறு 252)

கடுமையான மழை பொழிந்து கொண்டிருக்கும் நடு இரவினிலே கூட தூங்காமல், பெரிய குளம் ஒன்று உடைபடாமல் பாதுகாத்துக் கொண்டிருக்கும் அதன் காவலன் போல, என்னை அன்னை பாதுகாத்து வருகிறாள்’ என தலைவி தனது இக்கட்டான நிலை குறித்து தோழி மூலம் தலைவனிடம் சொல்லுகிறாள் என அக நானூற்றுப் பாடலில் நக்கண்ணையார் என்ற புலவர் பாடியிருக்கிறார்.

இவ்வாறு அக வாழ்விலும், புறவாழ்விலும் கூட பண்டைய தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் மழை நீரானது பூமிக்கு உயிர் நீராகும். நீரின்றி ஒரு நாள் கூட மனிதனாலோ அல்லது பூமியில் இருக்கும் எந்த உயிரினமும் வாழவே முடியாது. எந்த ஒரு மனிதனும் மழையை வெறுக்கமாட்டான்.

மழை பெய்தால் தெருவில் ஓடி, நிறைந்து, வழிந்து செல்லும். சென்னையில் இருக்கும் குளங்களை எல்லாம் தூர்த்தும், நீர் வழிப் பாதைகளை எல்லாம் வழிமறித்து வீடு வாசல் கட்டி வைத்துக் கொள்கிறார்கள். அரசு அவர்களை வெளியேற்ற முயன்றால் போராட்டம், கலவரங்கள் செய்ய வேண்டியது. பெரும் பணக்காரர்களின் அதீத ஆசைக்குப் பலியாகி ஏரிகளை வீடுகளாக்கிக் கொண்டு வாழ்வதும் இவர்களே.

மழையே பெய்யக் கூடாது. அப்படியே பெய்தால் வீட்டுக்குள் வரவே கூடாது. தெருவில் நீர் செல்லவே கூடாது என்றெல்லாம் வீடியோ போட்டுக் கொண்டிருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் குப்பைகளைக் கொட்ட வேண்டியது. நீர் வழிப் பாதைகளை அடைத்து விட வேண்டியது. மழை பெய்தால் அடைக்கத்தான் செய்யும்.  அய்யோ அரசு அப்படி செய்கிறது, கவனிக்கவே இல்லை எனக் கூப்பாடு போட வேண்டியது. 

சென்னை வாழ் மக்கள் மழைக்காலங்களில் போடும் மீம்ஸுகளும், மழையினைக் காரணம் காட்டி அரசையும், அரசு ஊழியர்களையும் கேவலமாகப் பேசுவதும், மழையை வெறுப்பதும் போன்ற செயலை எவரும் செய்ய மாட்டார்கள். ஆனால் சென்னையில் அதைச் செய்கிறார்கள். அரசியல்வியாதி பலதும் சொல்வான். கேட்பவர்களுக்கு புத்தி எங்கே போகிறது எனத் தெரியவில்லை. சோஷியல் மீடியா கூலிப்படையினரின் ஆட்டம் எழுத்தால் எழுத முடியவில்லை. வக்கிரம், ஆபாசம், தனி மனித தாக்குதல், உறவுத்தாக்குதல் என ஆட்டம் எல்லை மீறிப் போகிறது. இதற்கெல்லாம் ஒரு வழி வரத்தான் போகிறது. அப்போது பொய்களும், இணையக் கூலிப்படைகளின் ஆட்டமும் அடக்கப்படும்.

மழை என்பது கொடை. அதை வரவேற்று, அதைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதை விடுத்து மழையை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தும் கேவலமான பிறவிகளுடன் சேர்ந்து கொண்டு - மக்களும் மழையை வெறுத்தால் - நாளை நீரின்றி சென்னை அழிந்து போகும்.

மழையைக் கொண்டாடுங்கள். மழையை வரவேற்று மகிழுங்கள். நீர் வழிகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். 

26.11.2024

Friday, November 22, 2024

அரசு மருத்துவர்களின் அதிகாரத் திமிர்

சென்னை அரசு மருத்துவமனை மருத்துவர் பாலாஜியை, ஒரு இளைஞன் கத்தியால் குத்தி விட்டான். 

அம்மாவுக்குப் புற்று நோய்.

தனியார் மருத்துவமனைகளில் செலவாகும் என்பதால் கிண்டியின் அரசு மருத்துவமனை.

விக்னேஷ் அம்மாவுக்கு நோய் சரியாக மருத்துவர் வைத்தியம் செய்திருக்கிறார். 

விக்னேஷின் அம்மா பிரேமாவின் பேட்டியின் படி இந்த மருத்துவர் கண்டபடி திட்டுவார் போல. புற்று நோயின் இரண்டாவது ஸ்டேஜில் சிகிச்சைக்குச் சென்றவர் ஐந்தாவது ஸ்டேஜுக்கு முன்னேறி இருக்கிறார். மருத்துவர் பாலாஜியின் சிகிச்சை மகத்துவம் என்கிறார் பேட்டியில்.

பதினெட்டு நாட்கள். படாத பாடு பட்டிருப்பார்கள் அம்மாவும், பையனும்.

சகட்டு மேனிக்கு திட்டுவாராம் மருத்துவர்.

இளம் ரத்தம். கீறி விட்டான்.

பரபரப்பு.

மருத்துவர் உலகம் பொங்கி பொங்கல் வைக்க கிளம்பினார்கள்.

மேற்கு வங்கம் போல இங்கும் ஒரு படையல் போட்டு விடலாமென ஒவ்வொரு அரசியல்வியாதியும் மருத்துவரை குசலம் விசாரிக்க கிளம்பி, போராட்டம் வரைக்கும் சென்றார்கள்.

இளைஞன் விக்னேஸ் மக்களில் ஒருவன். மருத்துவருக்குப் பொங்கிய அரசியல்வியாதிகள் விக்னேசுக்காகப் பொங்கவில்லை.

ஏனெனில் மருத்துவர்கள் மட்டுமே ஓட்டுப் போட்டு - இவர்கள் பதவிக்கு வந்து இருக்கிறார்கள்.

அவன் குற்றவாளி. 

குற்றத்தைத் தூண்டியவருக்கு அரசுப் பாதுகாப்பு.

மக்களின் ஒருவனான விக்னேசுக்கு மக்களாகிய நாம் தானே ஆதரவு தர வேண்டும். 

நாம் கொடுக்கும் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் மருத்துவருக்கு நோயாளிக்குச் சிகிச்சை கொடுப்பது பணி. நோயால் பீடிக்கப்பட்டவர்களிடம் ஆதரவாக பேச வேண்டியது  கடமை. 

திட்டினால் கேட்டுக் கொண்டிருப்பார்கள் பலரும் என்னைப் போல. இங்கே சற்றே கோபம் வந்து விட்டது. 


கரூரில் ஆர்த்தோ மருத்துவரிடம் மாற்றுத்திறனாளி இரயில்வே கன்செஷன் சர்ட்டிபிகேட்டில் கையொப்பம் வாங்கச் சென்றிருந்தேன்.

சுமார் இரண்டு மணி காத்துக் கிடந்த பிறகு, வாசல் திறந்தது.

அரசு காசுக்குக் கேடு!

எங்கே போகிறாய்? 

எதுக்குப் போகிறாய்?

அரசாங்கத்தைச் சொல்லனும்!

தண்டச் செலவு?

60 சதவீதம்னு போட்டுத் தாரேன்!

சரி, சரி, எவ்ளோ காசு வெச்சிருக்கேய்?

இம்புட்டுத்தானா? இன்னும் வேண்டும்!

சரி, சரி, இந்தா...!

போட்டோவில் கையெழுத்துப் போட்டு விட்டு, கீழேயும் கையொப்பம் இட்டு சீல் வைத்தார்.

இலவச அர்ச்சனைகளுடன் சர்ட்டிபிகேட் கைக்கு வந்தது. 

200 ரூபாய் கைமாறியது. அவருக்குச் சற்றே ஆசுவாசம். அரசு பணம் செலவாயிடக்கூடாது என்பதில் மருத்துவருக்கு அவ்வளவு கரிசனம்.

கரூர் ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் புக் செய்யும் போது, ரவுண்ட் சீல் இல்லைன்னா டிக்கெட் கொடுக்க முடியாது.

மறு நாள் இரவு.

மீண்டும் இரண்டு மணி நேரம் வாசல் திறக்கக் காத்திருப்பு.

வேண்டா வெறுப்பாய் ரவுண்ட் சீல். 

மருத்துவருக்கு அரசு தரும் வசதியை தன்னைத் தவிர பிறர் அனுபவித்து விடக்கூடாது என்பதில் அவ்வளவு ஆனந்தம். பொண்டாட்டி வீட்டுச் சீதனம் பாருங்க. அவருக்குத் தெரியும், சீல் வைக்க வேண்டுமென. ஆனாலும் அலைய விடுவதில் ஒரு ஆனந்தம்.

20 வருடத்திற்கு முன்பு நடந்தது. இன்னும் நினைவிலாடுகிறது.

இளைஞன் விக்னேசுக்கு சும்மாச்சுக்கும் கோபம் வந்திருக்காது. அது சட்டப்படி தவறு. திட்டியிருக்கலாம். ஆனால் குத்தியிருக்கிறான். 

சட்டம் இனி அவன் வாழ்க்கையில் வெளையாடும்.

விதி வந்தவனுக்கு சட்டம் சனி பகவான். 

கடமையே கண்ணாக ஆற்றும் சட்டம். 

அரசியல்வாதிகள் என்போர் யாருக்காக என புரிந்து கொள்ள வேண்டும். ஏழைகளுக்கு ஒன்று எனில் எவரும் வர மாட்டார்கள். 

ஏழைக்கு ஏது நீதி?

22.11.2024

Saturday, November 16, 2024

நிலம் (118) - கோவை சூலூர் வட்டம் கரவழிமாதப்பூரில் நிலமெடுப்பு அறிக்கை

கோவை மாவட்டம், சூலூர் வட்டத்துக்கு உட்பட்ட கரவழி மாதப்பூர் கிராமத்தில் தமிழ் நாடு தொழில் வளர்ச்சிச் துறை பல் முனை சரக்கு போக்குவரத்துப் பூங்கா அமைப்பதற்காக நிலமெடுப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. யாருடைய நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன என்பதைப் பற்றிய விபரங்கள் கீழே உள்ளது. பயன்படுத்திக் கொள்க. 

இதன் மொத்தப்பரப்பு 54.70.00 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. 






Sunday, November 10, 2024

நிலம் (117) - வீட்டு வசதி வாரிய நிலங்களை விடுவித்தது அரசு

05.11.2024ம் தேதியன்று முதல்வர் முக ஸ்டாலின் கோவை வந்த போது - மக்களின் தீராத்துயரை நீக்கும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். தமிழ்நாட்டு வீட்டு வசதி வாரிய நிலம் எடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்கள் அனேகம். 

காளப்பட்டி ஹவுசிங் போர்ட்டில் பெரும்பாலானோருக்கு நிவாரணம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர். கோவை விளாங்குறிச்சியில் ஹவுசிங் போர்ட் நோட்டிபிகேஷனில் இருந்த சைட்டுகளுக்கு என்.ஓ.சி வாங்கிக் கொடுக்க சுமார் ஒரு வருடம் அலைந்திருக்கிறேன். ஒரு வழியாக தடையின்மைச் சான்றினை அப்பகுதிக்கு நான் தான் முதன் முதலாய் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். 

காளப்பட்டி ஹவுசிங் போர்டு கதையே வேறு. புத்திசாலிகளான பலர் காளப்பட்டி ஹவுசிங் போர்டு நிலத்தினால் பெரும் கோடீஸ்வரர்கள் ஆனார்கள். அது ஒரு தனிக்கதை.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கையகப்படுத்த அறிவிக்கை வழங்கப்பட்ட நிலங்கள், கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்ட நிலங்கள் ஆகியவற்றிற்கு நீண்ட காலமாக பொதுமக்கள் தடையின்மை சான்று கோரியும், நில எடுப்பிலிருந்து விலக்களிக்கக் கோரியும் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்தது.

இவ்வாறு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் ஹவுசிங் போர்டு நிலமெடுப்பில் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் முதல்வர் விடியலைத் தந்திருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் வீட்டுவசதி துறையினால் நிலமெடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட இனங்களில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் திட்டத்தில் பயன்படுத்தாத மதுரை, சேலம் மண்டலங்கள், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வீட்டு வசதி வாரியத்தின் 2,002 ஏக்கர் நிலம் எங்கெங்கு விடுவிக்கப்பட்டது என கீழே படித்துக் கொள்ளவும்.

மதுரை மண்டலத்தில், மதுரை மாவட்டத்தில் விளாங்குடி, தத்தனேரி, பொன்மேனி, தோப்பூர், உச்சபட்டி, ஆனையூர், சிலையநேரி, மாடக்குளம், மேற்கு மதுரை பகுதிகளிலும், அரியலூர் - குரம்பன் சாவடி, தஞ்சாவூர் - நீலகிரி தெற்கு தோட்டம், மகாராஜ சமுத்திரம், விழுப்புரம் - சாலமேடு, கடலூர் - வில்வராயநத்தம், வெளி செம்மண்டலம், திண்டுக்கல் - செட்டிநாயக்கன்பட்டி, விருதுநகர் - சதிரராயடியபட்டி, திருச்சிராப்பள்ளி - வாழவந்தான்கோட்டை, நாவல்பட்டு, கரூர் - தாந்தோனி, திருநெல்வேலி - குலவாணிகபுரம், கன்னியாகுமரி - வடிவீஸ்வரம், தூத்துக்குடி - மீளவிட்டான், ராமநாதபுரம் - சூரன்கோட்டை, சக்கரகோட்டை ஆகிய பகுதிகளில் 317.75 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மண்டலத்தில், தருமபுரி - ஏ.ஜெட்டிஹள்ளி, கிருஷ்ணகிரி - கட்டிகனபள்ளி, சென்னாத்தூர், ஒசூர், ஈரோடு - கொல்லம்பாளையம் கிராமம், பெரியசெம்மூர், முத்தம்பாளையம், வேலூர் - சத்துவாச்சேரி, அலமேலுமங்காபுரம், திருப்பத்தூர் - ஆம்பூர் டவுன், ராணிப்பேட்டை - சீக்கராஜ்புரம், வாலாஜா டவுன், வாலாஜா டவுன் மற்றும் ஆனந்தாலை, திருவண்ணாமலை - திருவண்ணாமலை, காஞ்சிபுரம் - சிவகாஞ்சி, கொன்னேரிக்குப்பம், செவிலிமேடு, சேலம் - நரசிங்கபுரம், அய்யம்பெருமாள்பட்டி, கண்டம்பட்டி மேற்கு மற்றும் கிழக்கு, கொட்டகவுண்டம்பட்டி, அழகாபுரம்புதூர், நாமக்கல் - கடச்சநல்லூர், முத்தம்பாளையம, கொண்டிசெட்டிப்டி, வகுராம்பட்டி, புதுப்பாளையம், பள்ளிப்பாளையம், கோயம்புத்தூர் - கணபதி, விளாங்குறிச்சி, வீரகேரளம், தெலுகுபாளையம், கவுண்டம்பாளையம், வடவள்ளி, குமாரபாளையம், காலப்பட்டி, உப்பிலிபாளையம் பகுதிகளில் 1141.68 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் குத்தம்பாக்கம், கீழ்முதலம்பேடு (பணப்பாக்கம்), பெருமாளகரம், வெள்ளவேடு, செம்பரம்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆலப்பாக்கம் ஆகிய பகுதிகளில் 542.79 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் மேற்குறிப்பிட்ட புல எண்களுக்காக இனி வீட்டுவசதி வாரியத்திடம் இருந்து தடையின்மை சான்று பெறத்தேவையில்லை. 

அரசாணை கீழே உள்ளது. படித்துப் பயன் பெறுங்கள்.

வளமுடன் வாழ்க...!









Thursday, October 10, 2024

ரிங் டோன்

ரத்தன் டாட்டா 

வந்தார், வாழ்ந்தார், வாழ வைத்தார், சென்றார்.

மொபைல் போனில் ரிங்க் டோன் மாற்றினேன். பல நண்பர்களிடமிருந்து என்ன ஆச்சு? ஏன் மாற்றி விட்டீர்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

கெட்டவன் என்ற படத்தினை இயக்கி, தயாரித்து - குடும்பத்துக்கும், கடன்காரர்களுக்கு கெட்டவனாய் போனார் இயக்குனர் கதிர். பெரும் போராட்டத்தின் பின்னும், பல வலிகளை அனுபவித்து கடந்த பிறகு - இப்போது நல்ல நிலைக்கு வந்து விட்டார். 

அவருக்கு எனது பழைய நிறுவனமான ஃபெமோ சினிமாஸ் மூலமாக ஒரு விளம்பரப் படத்தினை தயாரிக்கும் பொறுப்பைக் கொடுத்து, அவர் அதை வெற்றிகரமாக முடித்து தந்தார். அந்த நேரத்தில் அவரின் செல்போனில் இருந்த ரிங் டோன் - எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே, நதி போல ஓடிக் கொண்டிரு - எனக்கு இந்த ரிங்க் டோன் பிடித்ததால் எனது போனில் தொடர்ந்தேன்.

நதி போல ஓடிக் கொண்டிருந்தால் - கர்நாடகா போல எவராவது தடுப்பணை கட்டி விட்டால், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து தீர்ப்பினைப் பெற வேண்டியவை போன்ற வம்புகள் ஏதேனும் வந்து விட்டால் - என்பதற்காக ரிங்க் டோனை மாற்றி விட்டேன். 

காங்கிரஸ் கட்சியின் பொறுப்பில் இருக்கும் எனது நண்பரொருவர் - நூறாண்டு காலம் வாழ்க, நோய் நொடியில்லாமல் வளர்க, ஊராண்ட மன்னர் புகழ் போலே, உலகாண்ட புலவர் தமிழ் போலே, நூறாண்டு காலம் வாழ்க - என்ற ரிங்க் டோனை வைத்திருந்தார். 

இந்த ரிங்க் டோனில் தமிழ் வருவதாலும், நோய்க்கே நோய் கொடுக்கலாமே என்ற நல்ல எண்ணத்தினாலும் நீண்ட காலம் வைத்திருந்தேன்.

ஏர்டெல்லின் அட்டகாசம் தாங்க முடியாமல் - ஜியோவுக்கு மாறிய பின்னாலே இந்த ரிங்க் டோனை வைக்க காசு கேட்டார்கள். பாவம் ஏழை முகேஷ் அம்பானி. ஆனால் நான் அவரை விட ஏழையானதால் - மீண்டும் இலவசமாய் கிடைத்த எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே ரிங்க் டோனை வைத்திருந்தேன்.

ஏதோ ஒரு சமயத்தில் ஜியோ ஏமாந்து போய் - நூறாண்டு காலம் வாழ்க ரிங்க் டோனை இலவசமாக கொடுக்க, காத்திருந்த கொக்கு போல - படக்கென்று மாற்றி விட்டேன்.

எத்தனையோ பிரச்சினைகள் இருந்தாலும் நம்மை அழைக்கும் நபர்களுக்கு வாழ்த்தைப் போட்டால் அந்த நொடியில் மகிழ்வார்களே என்ற எண்ணத்தில் வைத்திருந்தேன். பலரும் பாராட்டினார்கள். ஒரு சிலரோ இந்தப் பாட்டெல்லாம் சினிமாவிலா வந்தது? என அமலாக்கத்துறை போல விசாரித்தார்கள். அ.துறை விசாரிக்க மட்டும் தானே செய்யும்?

எப்போதுமே யாராவது நம்மை, நாம் செய்யும் செயலை தீர்மானித்து விடுகிறார்கள். அப்படி இப்போது ரிங்க் டோனை மாற்ற வேண்டிய சூழல் வந்து விட்டது. 

ஒரு நன்னாளிலே - திருப்பதி லட்டுவும் மாட்டுக் கொழுப்பும் அதன் தொடர்பாக பவன் கல்யாணின் விரதமும் பரபரக்க - நான் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண் அவர்களின் பரம ரசிகன் என்ற வகையில் - வேதத்தில் லட்டுவைப் பற்றிய விபரங்களை ஆராய, வேதத்தைப் படிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது.

பவன் கல்யாண் நான்கு கல்யாணங்களைச் செய்தவர் அதாவது அஃபீஷியலாக என்ற ஒற்றை சம்பவத்துக்காக அவரின் ரசிகனானேன். ஒரு கல்யாணத்துக்கே மூச்சு முட்டுது, முட்டியும் கழடுது. இதில் நான்கைந்து கல்யாணம் வேறு. நம்மால் முடியாததை வேறொருவர் செய்தால் ஆட்டோமேட்டிக்காக ஒரு ஈர்ப்பு வந்து விடுமே. அது போல என வைத்துக் கொள்ளுங்கள். 

பவன் கல்யாண் பக்தியினை வெங்கடாஜலபதிப் பெருமாள் ரட்சித்து - அவருக்கு துணை முதல்வர் பதவியெல்லாம் கொடுத்ததே - அவரின் ரசிகனான எனக்கு அவருக்கு கொடுத்தது போல வேண்டாம், ஒரு சிறு பதவி கொடுத்து விடமாட்டாரா பெருமாள் என்ற ஆசையினாலும் - ஜக்கி வாசுதேவின் அத்தனைக்கும் ஆசைப்படு- வை நான் ஏற்றிருக்கும் காரணத்தினாலும் - வேதத்தை படித்து அதிலே லட்டுவைப் பற்றி என்ன சொல்லி இருக்கிறது எனப் படித்து - ஒரு பதிவை எழுதலாமென்று எண்ணத்தினாலே படிக்க ஆரம்பித்தேன்.

சத்தியமாகச் சொல்கிறேன். அந்தக் காலத்தில் ரகசியமாக விற்ற சரோஜாதேவி காமக்கதைகளை விட - பெரும் கிளர்ச்சி தரக்கூடிய சம்பவங்களை படித்தேன். 

இதோ கீழே இருக்கிறது அதிலொரு பகுதி. நீங்களும் படித்துக் கொள்ளுங்கள். 

சிறார்கள் படிக்க வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன். அப்கோர்ஸ் எட்டாவது வயதில் திருமணம் செய்ய வேதம் அனுமதித்தாலுமே கூட - பருவம் வந்த பின்னாலே படித்துக் கொள்ளுங்கள். 

தெய்வங்களும் மனித ரூபாய நமஹ...!

மனைவிக்கு சந்தேகம் வந்து விட்டது. என்னங்க, என்ன அப்படி விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று அவ்வப்போது அருகில் வந்து டென்சன் படுத்திக்கொண்டிருந்தார். 

அவருக்குத் தெரியாமல் ஒரு வழியாக அந்த பள்ளம் தோண்டும் மிஷின் பெயருடைய அதைப் படித்து விட்டு - பிரம்மனுக்கு நான்கு தலை வந்த காரணத்தைத் தெரிந்து கொண்டு - யோசனையிலும் ஆழ்ந்தேன். 

தொடர்ந்து படிக்கும் போது, ஒவ்வொருவரின் செயலுக்கும் அவரவரே பொறுப்பு என்பது போல இருந்ததால் - அந்த நொடியில் - போதி மரத்தின் வழியாக புத்தருக்குக் கிடைத்த ஞானம் போல - எனக்கு ஞானம் கிடைத்தது. 

நீ யார் மற்றவரை வாழ்த்த? உனக்கு என்ன அருகதை இருக்கு? என்றெல்லாம் ஞானம் பெற்ற மனசு தனியாகப் பிரிந்து நின்று - என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே- கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தது. இதுவரை சினிமாவில் மனச்சாட்சி பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த எனக்கு - முதல்முறையாக என் முன்னால் நின்ற என்னைப் பார்த்து டென்சன் வந்து விட்டது.

இன்று காலையில் எனக்கொரு மெசேஜ் வந்திருந்தது. கீழே இருப்பதைப் படித்துப் பாருங்கள். 

உழைப்பின் இலக்கணமே,

யுக்திகளின் உறைவிடமே,

பணிவின் பிறப்பிடமே,

பண்பின் பாடசாலையே,

பரோபகாரத்தின் இமயமே, 

இதுவரை  வாழ்ந்தாய் இப்புவியில்,

இன்று முதல் விதைத்தோம் எங்கள் இதயத்தில் ,

கனத்த இதயத்துடன் பிரியா விடை தருகிறோம் உங்களுக்கு,

உங்கள் முன்னாள் ஊழியன்,

நான்கு மணிக்கு விழித்து எழும் எனக்கு இதைப் படித்த அந்த நொடியில் உயிரோடு இருக்கிறேனா? என்று என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். இந்த நண்பர் ஏன் இப்படி ஒரு மெசேஜை அனுப்பி இருக்கிறார்? 

நேற்று ரத்தன் டாட்டா மறைந்ததற்காக - அவரின் புகைப்படத்தினைத் தொடர்ந்து எழுதிய போது - எனக்கு அனுப்பும் போது ரத்தன் டாட்டாவின் புகைப்படத்தை அனுப்ப மறந்து போனார் நண்பர்.

அப்டேட்டில் இல்லையென்றால் எழக்கூடிய அபத்தங்களை நினைத்தேன். 

உடனே வேதத்தைப் படித்ததால் பிறந்த ஞான தங்கவேல் உதித்து விட்டான். இதற்காகத்தான் சொல்கிறேன். நீ யார்? என்று பினாத்த ஆரம்பித்தான். இந்த ஞானம் இருக்கிறதே அது பெரிய பிரச்சினை. 

மனச்சாட்சி என்பதோ  அவ்வப்போது வந்து செல்வது. 

அழகான பெண்ணைப் பார்க்கிற போது - டேய் நீ திருமணமானவன் - இன்னொரு பெண்ணைப் பார்ப்பது தவறு - எனச் சொல்லும். 

ஆனால் ஞானமோ அதிலென்ன தவறு. அழகை அந்த நொடியில் ரசித்து விடு. அந்த நொடியே மறந்து விடு என்று சொல்கிறது. 

இந்தக் கதை உங்களுக்குத் தெரியும் தானே? முனிவர் ஒரு பெண்ணை ஆற்றைக் கடந்து தூக்கிக் கொண்டு போய் விட்டது. தெரியவில்லை எனில் கமெண்ட் போடுங்கள். எழுதுகிறேன்.

மனச்சாட்சிக்கும் - ஞானத்துக்கும் உள்ள வித்தியாசம் தெரிகிறதா? ஞானம் பெரிய தொல்லை என்பதால் - அவன் சொன்னதை செய்து விடலாம் என முடிவெடுத்து இந்த ரிங்க் டோனை வைத்தேன்.


இந்த ரிங்க் டோனை வைத்த பிறகு - அந்த ஞான தங்கவேல் ஓடியே போனான். ஏனெனில் அவனுக்கு மலையாளம் தெரியாது. ஒரு வழியாக அவனை விரட்டி விட்டு நிம்மதி அடையலாம் என்று நினைத்த நொடியில் - படுபாவி மனசாட்சி வந்து விட்டான்.

அவன் சொன்னதையெல்லாம் எழுத முடியாது. இன்னொரு வேதத்தை நாடு தாங்காது. 

Thursday, September 26, 2024

லப்பர் பந்து எனும் குப்பை

லப்பர் பந்து திரைப்படத்தைப் பார்த்த பிறகு மஹாத்மா காந்தி மீது கோபம் ஏற்பட்டது. 

தமிழ்நாட்டின் சினிமா இயக்குனர்கள் மறந்து போன பார்முலா ஒன்று உண்டு. 1960களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த கும்பகோணம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் பார்முலாவைத் தொட்டு விட்டால் வெற்றி நிச்சயம். அதைத் தொட்டிருக்கிறது இந்தப் படம். 

பார்முலா பற்றிப் புரியவில்லை என்பவர்களுக்காக எழுதுகிறேன். பாக்கியராஜ் இந்த பார்முலாவை தொட்டவர். முந்தானை முடிச்சில் ஆரம்பித்த பார்முலா திசைமாறியது வேட்டியை மடிச்சுக்கட்டு திரைப்படத்தில். அன்றிலிருந்து அந்த பார்முலாவை விட்டு விலகினார்- வெற்றியும் அவரை விட்டு விலகியது.

வேட்டியை மடிச்சுக்கட்டு என்றவுடன் இந்த மாதம் பெருமாள் முருகன் - உயிர்மை இதழில் எழுதிய செம்மி சிறுகதை நினைவுக்கு வந்து விட்டது. இந்தச் சிறுகதையை நீங்கள் அவசியம் படித்துப் பாருங்கள். திகைத்து நிற்பீர்கள் .

கோடி ரூபாயை பைனான்ஸில் போட்டு விட்டு - பைனான்ஸ்காரனின் மூடிய கடைக்கு முன் ஏமாந்து நிற்கும் மன நிலையை விட இது வேறு விதமானது. கதையை படித்தவுடன் ஒரு நிமிடம் அதிர்ந்து நிற்கும் மனசு.

அந்த சிறுகதையின் இணைப்பு கீழே.

https://uyirmmai.com/article/uyirmmai-magazine-september-2024-perumal-murugan-short-story-02/

இடைச்செருகல்:

ஏ.ஆர்.ரகுமான் - என்னைப் பொருத்தவரை ஆஃப்ரிக்க, லெபனான், உருது, கஜல் பிட்டுசுட்டுக்கார புயல் - யு ஸ்ட்ரீம் என்றொரு விர்ச்சுவல் புரடெக்‌ஷன் ஹவுஸ் ஒன்றினை சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மான் ஃபில்ம் சிட்டியில் உருவாக்கி இருக்கிறார். இங்கு இதைப் பற்றி எழுத வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது எனக் கேட்பீர்கள். தொடர்ந்து வருகிறது. படியுங்கள்.

இவரின் பிசினஸுக்குப் பின்னாலே ஒரு வகையான கால்குலேஷன் இருக்கிறது. 

போனைத் தடவும் தடவல்காரர்கள் அதிகம் ரசித்துப் பார்ப்பது மல்லு படமோ, போர்னோ படமோ அல்ல. யூடிப்பில் வரும் உணவு ரெசிப்பீ(?)க்கள், ஹோட்டல் உணவு ரெவிவியூக்கள். இவைகளைத் தான் அதிகம் பார்வையிடுகிறார்களாம். 

ஒரு சில போலி ரெவிவியூவ் அண்டாவாய்க்காரர்கள், ஹோட்டல் உணவுகளை, பெரிய பைட்டா போயிடலாம், வேறமாரி எனச் சொல்லிக் கொண்டே, வயிற்றுக் குப்பைத் தொட்டிக்குள் தள்ளிக் கொண்டிருப்பதை, வாயில் எச்சில் ஒழுக பார்த்துக் கொண்டிருப்போரின் புள்ளியியல் கணக்கு எக்கச் சக்கமாம். 

பார்ப்பதிலேயே பரவசம் காண்பவர்களின் எண்ணிக்கை அதிகமென்பதால் - அந்தக் கணக்கு வழக்குகளின் விபரங்கள் தெரிந்த ஏ.ஆர்.ஆர் இப்படி ஒரு வெர்சுவல் புரடெக்‌ஷன் ஹவுசை உருவாக்கி இருக்கிறார். சிம்பிளாக சொல்லணும் என்றால் மூடிய கதவுக்குள் ஸ்டூடியோ. முன்பொரு காலத்தில் கொட்டகைக்குள் ஸ்டூடியோ போல இப்போது விர்ச்சுவல் ஸ்டூடியோ.

சிந்தைசர் இசை காசு தரும். உண்மையான இசையைத் தராது. அந்த இசைக்கோர்ர்வைகள் அரிப்பு எடுத்த இடத்தில் இட்ஸ்கார்டு கிரீம் தடவுவது போல இருக்கும். ரஹ்மான் பாடல்களை இப்போது கேட்க முடியாது.

இயற்கையான இசைக்கருவிகள் வழியே புறப்படும் இசை, கேட்பவர்களின் மனதிற்குள் இசைக்கேற்ற உணர்வுகளை உண்டாக்கும். புல்லாங்குழலுக்குள் புகுந்து வரும் இசைக்கும், செமிகண்ட்டக்டர் டிவைஸ்ஸுக்குள்ளிருந்து  வெளிவரும் இசைக்கும் வித்தியாசம் உண்டு.

ஆப்பிளின் விர்ச்சுவல் ரியாலிட்டி கேட்ஜெட் தோற்றுப் போன ஒன்று. விர்ச்சுவல் ரியாலிட்டி என்பது பொய்.

உண்மை உண்மை தான், அதன் தன்மை வேறு.

பொய் எப்போதும் பொய் தான்.  நெருப்பில் மூடிக் கிடக்கும் சாம்பல் போல. ஒரு காற்றுக்கே தாங்காது பொய். ஆனால் உண்மை அப்படி அல்ல. அது அணையா நெருப்பு.

இது போன்ற விர்ச்சுவல் ரியாலிட்டி படைப்புகளில் உயிரோட்டம் இருக்காது. உயிர்களின் உண்மையான உணர்வுகளைத் தராது.

தற்கால டெக் ஆட்களுக்கு வாட்சப்பே வள்ளுவர், ஃபேஸ்புக் அரிச்சந்திரன், டிவிட்டர் சிவபெருமான். படிக்கவும் மாட்டார்கள். படிப்பதைப் புரிந்து கொள்ளவும் தெரியாது. புரோ, ஐபோன் 18 அப்டேட் வந்துடுச்சு, கலக்கிட்டான் என்பார்கள்.  இதிலென்ன பெருமை வேண்டியிருக்கு? ஆப்பிள் ஐபோனை விற்றவன் அல்லவா பெருமைப்பட வேண்டும்? ஆப்பிள் போனைக் கையில் வைத்திருந்தாலே பெருமை மண்டி விடும். அடுத்த வருடம் கால்வாசி காசுக்கு கூட விற்கமுடியாமல் போகும் பொருள் போன்.  

பைத்தான் படித்தால் பெருமை, ஐடி கம்பெனியில் அடிமை வேலை பார்த்தால் பெருமை, கார் வாங்கினால் பெருமை, வீடு வாங்கினால் பெருமை. இப்படி எதெற்கெடுத்தாலும் பெருமை, பெருமை. பைசாவுக்கு பிரயோசனம் உண்டா இதிலே? என் மகளுக்கு சமைக்கவே தெரியாது. இப்படி ஒரு பெருமை அந்தப் பெண்ணைப் பெத்த அம்மாவுக்கு. பெருமை என்பது போலித்தனமானது. அது முடிவில் இழப்பை உண்டாக்கும். 

இப்படியான போலி மாயைகளில் சிக்கி இருப்போரிடம் பொய்களை விதைத்து, அறுவடை செய்வது எளிதானது. அதைப் புரிந்து கொள்ளும் பக்குவமும், அறிவும் இருப்பதில்லை. பொய்களுக்கும், எதார்த்தத்தின் உண்மைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ளத்தான் யுடர்ன்ஸ் விர்ச்சுவல் ஸ்டியோ பற்றி எழுத வேண்டியிருக்கிறது.

முழுமையான விர்சுவல் ரியாலிட்டியில் தயாரிக்கப்பட்ட பான் இந்தியா திரைப்படமான பாகுபலியில் உயிரோட்டம் இல்லை. மாம்பழத்திலிருந்து அப்படியே சாறு எடுத்து பாட்டிலாக வருகிறது என்பார்களே அதுவும், உண்மையான மாம்பழச்சாறுக்கும் இடையே உள்ள வித்தியாசம் எப்படியோ அப்படித்தான் விர்ச்சுவல் ரியாலிட்டுக்கும், எதார்த்தமான படைப்புகளுக்கும் இடையில் உள்ளது.

லப்பர் பந்து உயிரோட்டமுள்ள படம். பாகுபலி இதன் முன்பு தூசுக்கும் காணாது. ஃபிக்ஸன் நாவலுக்கும், ஜானகிராமனின் மோகமுள்ளுக்கும் இருக்கும் மலையளவு வித்தியாசம் இரண்டு படத்துக்கும் உண்டு.

கற்பனை உலகின் உருவாக்கங்கள் எதார்த்தங்களோடு ஒன்றவில்லை என்றால், தோற்றுப் போன படைப்பு. லப்பர் பந்து திரைப்படத்தின் உயிரோட்டம் - படத்தைப் பார்க்கும் ரசிகனுக்குள் பல விதமான உணர்வுகளை உருவாக்குகிறது. ஏ.ஆர்.ரகுமானின் விர்ச்சுவல் ரியாலிட்டி ஸ்டியோ மூலம் வரப்போகும் படங்கள் செத்துப் போனவையாக இருக்கும்.

லப்பர் பந்து திரைப்படம் - சாமானியர் பார்வையில் மிகச் சிறந்த, அற்புதமான படைப்பு. ஆனால் அதற்குப் பின்னால் இருக்கும் அரசியல் தான் என்னை அப்படம் குப்பை எனக் கருத வைத்தது.

குழந்தைகள் வளர வளர - அவர்களின் ஒவ்வொரு செயலையும் அம்மா, அப்பா,  அண்ணன், தம்பி, தங்கை, அக்கா, மாமா, பாட்டி, அத்தை, தாத்தா, சித்தப்பா இப்படி  பல உறவுகள் மெச்சி, பாராட்டி மகிழ்வார்கள். அதாவது குழந்தையின் ஒவ்வொரு செயலையும் அங்கீகரிப்பார்கள். இந்த மன நிலை குழந்தைப் பருவத்திலிருந்து மனதுக்குள் பதிந்து விடும். 

இதை ஏன் இங்கு சொல்கிறேன் என போகப் போகப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

லப்பர் பந்து திரைப்படத்தின் கதையைச் சுருக்கமாக பார்க்கலாம்.

அட்டைகத்தி தினேசு கிரிக்கெட் விளையாடுபவர். கீழ்சாதிப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, ஆர்ட் வேலை செய்பவர். இப்பெண்ணுக்கு கணவன் கிரிக்கெட் விளையாடுவது பிடிக்காது.

இவர்களுக்கு ஒரு பெண். 

அய்யராத்து அம்பி ஹரீசு கல்யாண் - கிரிக்கெட் பைத்தியம், சொந்தமாக பிரிண்டிங் தொழில். படத்தில் கீழ் சாதிப்பையன். நன்றாக கிரிக்கெட் ஆடுவான். ஊரில் பிரபலமாக இருக்கும் ஜில் பாய்ஸ் கிரிக்கெட் டீமில் கீழ்சாதி என்பதால், இவனை அவர்களுடன் விளையாட சேர்த்துக் கொள்ளமாட்டார்கள்.

கிரிக்கெட் விளையாட்டில் பட்டாசாய் வெடிப்பவன் தினேசு. வயதானாலும் பந்தை அடித்து பட்டாசாய் ரன்களைப் பறக்க விடுவான். 

ஹரீசு - தினேசின் பெண்ணைக் காதலிப்பான். காதலி எதார்த்தமானவள்.  ஒரு கட்டத்தில் தினேசு கிரிக்கெட் விளையாடுவதை ஹரீசு விமர்சிக்க இருவருக்குள்ளும் ஈகோ வந்து விடும். 

காதலியின் அப்பாதான் தினேசு என்று  தெரியாது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் தெரிந்து விடும். அப்பா ஓகே சொன்னால் தான் கட்டிக்குவேன் என்கிறாள் காதலி. 

ஹரீசு தினேசு இணைப்பு நடந்தே தீரும். அதுதானே உலக சினிமா வழக்கம்?

முட்டல், மோதல், சேர்தல், காதல், வெற்றி கதைதான். ஆனால் முடிவில் ஒரு டிவிஸ்ட். கிளைமேக்ஸைச் சொல்லக் கூடாது. ஆனால் இங்கு சொல்லியே தீர வேண்டிய கட்டாயம். 

எனக்கு காந்தி மீது கோபம் ஏற்பட்டது என்று இந்தியாவின் டைபிக்கள் பொய்யான அகிம்சாவை வம்பிற்கு இழுத்திருக்கிறேன் அல்லவா? அதென்ன டைப்பிக்கள் பொய் என்கிறீர்களா? 

அகிம்சா வழிப் போராட்டங்களைப் பார்த்து, மனம் பதைத்த ஆங்கிலேயன் இந்தியாவிற்கு விடுதலை கொடுத்து விட்டு சென்று விட்டான். இப்போது அகிம்சை வழி போராட்டம் என்றால் 800 பேர் செத்துப் போக வேண்டும். 

வேற்று சாதி பையன்களை கிரிக்கெட்டில் சேர்க்காத ஜில் பாய்ஸ் டீமுக்கும் - தினேசு-ஹரிசு அடேங்கப்பா டீமுக்கும் போட்டி. 

தோற்று விடுவோம் என்பதால் கீழ்சாதிப் பையன்களை ஜில் பாய்ஸ் டீமுக்குள் கொண்டு வருகிறார்கள். தினேசு-ஹரிசு அடேங்கப்பா டீம் போட்டியில் தோற்று விடுகிறது. ஜில் பாய்ஸ் டீமுக்குள் கீழ்சாதி பையன்கள் கிரிக்கெட் விளையாடி ஒன்னு மண்ணாக இருப்பது, இவர்கள் வெற்றி பெற்றால் கெட்டுப் போகும் எனக் கருதி இருவரும் பேசி முடிவு செய்து வேண்டுமென்றே தோற்றுப் போவார்கள். அடுத்த ஆறு மாதங்கள் சென்ற பிறகு எல்லா சாதிக்காரர்களும் மைதானத்தில் ஒன்றாக விளையாடுகிறார்கள்.

இனி தான் மேட்டரே இருக்கிறது. 

விகடன் ஆன்லைனில் வருடம் 900/- ரூபாய் கட்டிப் படிக்கிறேன். அதில் லப்பர் பந்து கட்டுரையில் கீழே இருக்கும் கமெண்ட்டைப் போட்டேன். உடனடியாக பதிவானது. ஆனால் அடுத்த சில நொடிகளில் நீக்கப்பட்டு விட்டது. 

இந்தப் படத்தைப் பார்த்தவுடன் எனக்கு தோன்றியதுதான் இந்தக் கமெண்ட்.

விகடன் இந்தக் கமெண்டை நீக்கி விட்டது. ஏனென்று உங்களுக்குத் தெரியும். இந்த சாதியக் கட்டு அறுந்து போனால் அவர்களின் பொய் கட்டுமானம் நொறுங்கி விடும். இப்படியான கருத்து கூட அவர்களுக்கு எதிரானது. 

உயர்ஜாதிக்காரர்களுடன் எல்லா சாதிக்காரர்களும் சேர்ந்து விளையாட வேண்டுமாம். திரைப்படம் சொன்ன செய்தி. 

ஏன் அவர்களுடன் சேர வேண்டும்?  தன்னை உயர்சாதி என்றுச் சொல்பவர்களிடமிருந்து விலகிச் சென்றால், அவர்களை ஒதுக்கி வைத்தால், ஒதுங்கிச் சென்றால் என்ன ஆகி விடும்? செத்துப் போவோமா?

பிறந்தால் செத்துதானே போவோம்? அவன் தன்னுடன் சேர்த்துக் கொண்டால் ஒவ்வொருவரின் வயிற்றுப் பசி போய் விடுமா? யாருக்கும் நோய் வராதா? சாவு வராதா? எல்லாமும் வரத்தானே செய்யும்? ஏன் உயர்சாதிக்காரர்கள் என்பவர்களுடன் ஒட்டணும், உறவாட வேண்டும்?

அவர்கள் தங்களை மதிக்க வேண்டும், அங்கீகரிக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறோம்? 

காரணம் என்ன தெரியுமா?

கீழ்சாதி என்ற எண்ணம் மனதுக்குள் புகுந்து, பயமாக மாறி விட்டது.

தேவர் சமுதாயத்தில் பிறந்த என்னால் பிராமணர் வீட்டுக்குள் செல்ல முடியாது. பிராமணர்களைப் பொறுத்தவரை நானும் கீழ்சாதிக்காரன் தானே? இப்படி ஒவ்வொரு சாதி மீது நிகழ்த்தப்படும் இந்தத் தாக்குதலை வேறொரு சாதி மீது தொடுக்கிறோம். இதை எதிர்பார்த்துதான் சாதிய அடுக்குகள் உருவாக்கப்பட்டு, சமூகத்திற்குள் புகுத்தப்பட்டது. இதன் காரணமாக சமூகத்தில் சம நிலை, சமூக நீதி தவறுகிறது. 

இதைத்தான் முன்னோர்கள் காலத்தில் இருந்த பிராமணர்கள் உருவாக்கினார்கள். அது இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது பல வடிவங்களில். அந்த வடிவத்தைதான் இந்தப் படமும் வெளிப்படுத்துகிறது.

கீழ்சாதிக்காரர்களுடன் சேர்ந்து விளையாட உயர்சாதிகாரன் முயல்கிறான் என்று படம் எடுக்க தோன்றவில்லை இந்த இயக்குனருக்கு? இயக்குனரின் மனதுக்குள் பதிந்து விட்ட சாதியப்பயம் அவரை சிந்திக்க விடாமல் தடுக்கிறது.

இந்த சாதிய அடுக்குகளில் சிக்கியதால் தான் - நம் சொத்தான சிதம்பரம் நடராஜர் கோவிலை எங்கிருந்தோ வந்த தீட்சிதர்கள் திருடி தின்று கொழுக்கிறார்கள். இந்தக் கோவிலைக் கட்டியது, செலவு செய்தது தமிழர்கள். ஆனால் நீதிமன்றம் தீட்சிதர்களின் கோவில் என்று தீர்ப்புக் கொடுத்திருக்கிறது. பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இந்தக் கட்டமைப்பை உடைக்க வேண்டியவர்கள் கடவுளின் பெயரால் - பாப புண்ணியங்களின் பெயரால் - அடிமையாக இருக்கிறோம்.

இந்த பாப புண்ணியங்கள் தீட்சிதர்களுக்கு இல்லையா என்று எவராவது எப்போதாவது கேட்டிருப்பீர்களேயானால் - சிதம்பரம் கோவிலோ அல்லது கருவறையோ எல்லோருக்குமான உரிமையாக அல்லவா இருந்திருக்கும்?

பஞ்சாப் மக்கள் மோடி கொண்டு வந்த மூன்று விவசாயச் சட்டங்களை நீக்க வைத்தார்கள். அவர்களிடம் இருக்கும் அந்த துணிச்சல் - ஆங்கிலேயனை எதிர்த்த தமிழர்களிடம் காணாது போனது ஏன்? 

தெருநாய்க்கு கிடைக்கும் எச்சில் சோற்றைப் போல கீழ்நிலைப் பதவிக்களுக்கும், அவர்கள் சொல்லும் வேலைகளைப் பெறுவதற்கும், அலைந்து கொண்டு, அடித்துக் கொண்டிருக்கிறோம். 

இனிமேல் பெரியார் வரமாட்டார். பெரியாரை ஏன் உயர்சாதி என்று கருதிக் கொள்பவர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள் என்று தெரிகிறதா உங்களுக்கு?

சாதிய அடுக்குகளில் உண்டாக்கிய வெற்று சாதி அடுக்குகள் நீங்கினால் தான் அவர்கள் இப்போது இருக்கும் நிலைக்கு நாமும் செல்ல முடியும். அதை உடைத்து விடாமல் மதத்தின் பெயராலும் பாப புண்ணியங்கள் என்ற பெயரினாலும் சாதிய அடுக்குகளை உடையவிடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். நாமெல்லாம அதைப் புரிந்து கொள்ளாமல் இன்றும் இருக்கிறோம் என்பது தான் வேதனை.

பெரியார் மொழி, மதம் வழியான இவ்வகை ரகசிய சதிகளை அறிந்ததால் தான் அதையெல்லாம் சாமானியன் புரிந்து கொள்ளும் நோக்கில் பச்சையாகத் திட்டினார். எதிர்த்தும் நின்றார். 

ஒரு மதம் - ஆகமம் என்ற விதியைக் காரணம் காட்டி மனிதர்களுக்குள் பிரிவினையை உண்டாக்குமா? மதம் மனிதர்களுக்குள் அன்பைத்தான் போதிக்கிறது. பிரிவினையை எந்த மதமும் எப்போதும் போதிக்காது. ஆனால் அது அப்படித்தான் சொல்கிறது எனச் சொல்கிறார்களே அவர்கள் தான் மதத்தின் விரோதிகள் என்ற எளிய உண்மையைக் கூட சாமானியர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

நீ கீழ்சாதிகாரன், சமூகத்தில் ஒதுக்கி வைத்திருப்பது குற்றம், உனக்காக நான் போராடுகிறேன், அதை வெளிப்படுத்தும் படைப்புகளை முன் வைத்துப் போராடுகிறேன் என்று எவன் சொல்கிறானோ அவன் தான் சாதிய அடுக்குகளைப் பாதுகாப்பவன். அவன் தான் சாதியக் கட்டுமானங்களின் மீது ஒரு வித பயத்தை உண்டாக்குகிறான். அவன் தன்னை வளர்த்துக் கொள்ள, தன் வயிற்றுப் பசி தீர சாதியால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்றுச் சொல்லிக் கொண்டே இருக்கிறான். 

மகாத்மா காந்தி 1900 ஆண்டுகளில் உச்சத்தில் இருந்த காலத்தில் சாதிய அடையாளங்களுடனான சமூக நீதிக்கு முயன்றார்.

பெயர்களில், உடைகளில், உடலில் போடப்படும் குறியீடுகளில் இருக்கும் உயர்சாதி - கீழ்சாதி அடையாளங்களை ஒதுக்கி இருக்க வேண்டும் காந்தியார். 

ஹரிஜன் பத்திரிக்கை - ஹரிஜனுடன் ஒத்திசைந்த வாழ்வு என்றாலும் எங்கும் ஒரு கோடு இருந்து கொண்டே வருவதை இப்போதும் நீக்க முடியவில்லை. அந்த வகையில் லப்பர் பந்து போன்ற படங்கள் சாதியை மறக்கவிடாமல் பதிய வைத்துக் கொண்டே இருக்கும்.  

சிறு வயதிலிருந்து எது செய்தாலும் அங்கீகாரத்துக்கு ஏங்கும் மன நிலையானது, பெரியவர்களானாலும் விட்டு விலகுவதில்லை. அதனால் மனதுக்குள் ஆண்டாண்டு காலமாக பதிய வைத்திருந்த கீழ்சாதி எண்ணங்கள் அங்கீகாரம் வேண்டுமென்ற பாதையில் மட்டுமே பயணம் செய்கிறது. இப்படி இருக்க கூடாது என்பதற்காகத்தான் விகடனின் கட்டுரையில் மேலே இருக்கும் கமெண்டைப் போட்டேன். விகடன் அதை நீக்கி விட்டது. விகடனுக்கு அக்கருத்தை நீக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? இக்கருத்து கூட யாரோ சிலரின் மனதுக்குள் முளைத்து விடக்கூடாது என்ற அதீத ஜாக்கிரதை உணர்வு.

கமெண்டைப் போட்டு விட்டு, நான் அடுத்த வேலைக்குச் சென்றிருப்பேன். விகடனின் இந்தச் செயலை என்னால் ஏற்க முடியவில்லை. அதற்காத்தான் இந்த நீண்ட பதிவு எழுத வேண்டியிருக்கிறது. 

யாரும் நம்மை அங்கீகரிக்க வேண்டியதுமில்லை. எவரின் அங்கீகாரமும் தேவையுமில்லை. இந்த பூமி எல்லோருக்குமானது. எல்லாமும் எல்லோருக்கும் கிடைக்க வேண்டியது. இதில் யாருடைய அனுமதியோ - அங்கீகாரமோ தேவையே இல்லை. 

அந்த கருத்தின் அடிப்படையில் லப்பர் பந்து திரைப்படத்தை நான் குப்பை என்றேன்.

ஒரு நாட்டுக்குள் குடிமகனாகப் பிறப்பது - அதன் தொடர்ச்சியாக சட்ட திட்டங்களை மதித்து நடப்பது என்பது வேறு. நான் இங்கு எழுதி இருப்பது வேறு. இரண்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது.

லப்பர் பந்து திரைப்படத்தைச் சாமானியனின் பார்வையில் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கிறது.

கோபாலகிருஷ்ணனின் டச்சுக்கள் ஆங்காங்கே தென்படுகின்றன. பெண்ணடிமை போற்றும் விசு வகையறாக்களுக்கு இப்படம் பிடிக்காது. அது நமக்குத் தேவையும் இல்லை. இப்படம் பெண்ணடிமையினைத் தகர்த்து வீசுகிறது. காட்சிகள் ஒவ்வொன்றும் இயல்பானதானக, உணர்வு பூர்வமாக இருக்கிறது.

தினேசுக்கு அவன் மனைவி எவர்சில்வர் டப்பாவில் மட்டன் வறுவல் எடுத்து வைக்கிறாளே - அந்த டப்பாவுக்குள் இருக்கிறது வாழ்வியல் சூத்திரம். ஹரீசுக்கும் காதலிக்கும் மனப்பிரிவு உண்டான உடன், அவளைப் பார்க்க வரும் போது, காதலியின் அம்மாவிடம் அந்த எவர்சில்வர் டப்பாவைக் கொடுக்கும் போது தெரிகிறது தன் பெண் இவனைக் காதலிக்கிறாள் என. 

எல்லோரும் படத்தை அவசியம் பாருங்கள். 

இப்பதிவையும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். ஒரு சிலருக்கு இப்பதிவு வன்மமாகத் தோன்றலாம். அதற்கு அவரவர் மனநிலையும், புரிதல் தன்மையுமே காரணம். 

இனியெல்லாம் சுகமே உண்டாகட்டும் உங்களுக்கு.

அரைகிலோ ஆட்டுக்கறியை ஒரு இஞ்ச் சைசுக்கு துண்டாக்கி, நல்லெண்ணெயில் மசாலா சேர்த்து, அதனுடன் ஆட்டுக்கறியை வேக வைத்து சாப்பிடும் போது உண்டாகும் சுவையை நீங்கள் லப்பர் பந்து பார்க்கும் பெறலாம்.

சைவப்பிரியர்களுக்கு கோமிய பரிசுத்தத்திற்கு முன்பு கிடைத்த ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் விற்பனை செய்த லட்டுவின் சுவை போலச் சுவைக்கும்.

திட்டுவார் திட்டட்டும், போற்றுவார் போற்றட்டும். எல்லாமும் அவரவருக்கே சேரட்டும். 

Wednesday, September 18, 2024

நிலம் (116) - 1929ம் வருடச் சொத்துக்கு இப்போது வழக்கு

சமீப காலமாக மக்களின் மன நிலை வேகம் வேகம். எதற்கெடுத்தாலும் வேகம். பொறுமை என்பது இல்லவே இல்லை. உடனடியாக முடிவெடுக்கிறார்கள். உணர்ச்சி வசப்படுகிறார்கள். எது சரி? எது தவறு என்று புரிந்து கொள்ளாமல் ஃபேஸ்புக், டிவிட்டர், வாட்சப்செய்திகளை உடனே நம்பி விடுகின்றனர். 

இப்படி ஃபேஸ்புக், டிவிட்டர், வாட்சப்செய்திகளை  நம்பித்தான் இந்தியர்களாகிய நாம் நாசகாரர்களின் வலையில் சிக்கி, சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் வரி வரி என கொடுத்துக் கொண்டிருக்கிறோம். விடிவு காலம் எப்போது வருமோ?

என்னிடம் லீகல் பார்க்க வரும் நபர்களிடம் நான் 1900 ஆண்டிலிருந்து வில்லங்கம் பார்ப்பேன் என்றவுடன் தலை தெறிக்க ஓடி விடுகிறார்கள். 

“சார், வங்கியில் பதினைந்து ஆண்டுகளுக்கு மட்டும்தான் லீகல் பார்க்கிறார்கள்’ என்கிறார்கள்.

வங்கியில் நீங்கள் அடகு வைக்கும் சொத்தின் ஆவணங்களில் ஏதேனும் முறைகேடு இருந்தால் உடனடி கைது, ஜெயில் தான். சிபிஐ வரும். அவ்வளவுதான் காலம் முடிந்து போகும்.

தனியார் சொத்து வாங்கும் போதோ அல்லது கடன் பத்திரம் எழுதும் போது - அந்தச் சொத்தில் வில்லங்கம் ஏற்பட்டால் - வழக்கு அதுவும் சிவில் வழக்கு போட்டு, வக்கீல்களுக்கு ஃபீஸ் கொடுத்து, கோர்ட்டுக்கு நாயாய் பேயாய் அலைந்து, அலைந்து நொந்து நூடுல்ஸ் ஆகி விடுவார்கள்.

இதெல்லாம் தவிர்க்க என்னைப் போன்ற ஆட்கள் வேலை செய்வதாகச் சொன்னாலும் எகிறி விடுகிறார்கள். எதில் வேகம் வேண்டுமோ அதில் வேகமாக இருப்பதில்லை.

சமீபத்தில் ஒரு பிளாக் வாசகர் அவருக்கு வந்த கோர்ட் அழைப்பாணை பற்றி பேசினார். அவருக்கு நிகழ்ந்திருப்பது கொடுமை, கொடுமையிலும் கொடுமை.

இனி என்ன ஆகும்? 

சாமானியனுக்கு வழக்கில் வெற்றி பெற எத்தனை ஆண்டுகள் பிடிக்கும் என நினைக்கிறீர்கள். பத்து வருடத்துக்கு குறையாமல் சிவில் வழக்கு நடக்கும். அதுவரையிலும் செலவு, அலைச்சல், மன உழைச்சல் இத்யாதிகள். நிம்மதி பறி போகும். உடல் நிலை குலையும். 

இதுவெல்லாம் வேண்டாம் என்றால் யார் கேட்பது. ஆப்பில் தானே உட்கார்ந்து கொள்ள அவ்வளவு ஆர்வமாக துடிப்பார்கள். 

“சார், நீங்கள் சொல்வதைப் பார்த்தால் வில்லங்கச் சொத்துக்கள் ஏதுமில்லையா?” என்று கேட்க தோன்றும். 

உங்கள் உழைப்பு, எதுவாக இருந்தாலும் அது சரியாகத்தான் இருக்கிறது என்று பார்த்து விட்டால் நிம்மதியாக இருக்கலாம் அல்லவா? நல்ல சொத்துகள் நிறைய இருக்கின்றன இல்லையென்று சொல்லவில்லை. அதையும் சரியாக ஆராய்ந்து பார்த்தால் என்ன கெட்டுப் போகப் போகிறது?

”புரோக்கர் சொன்னார் , அட்வான்ஸ் போட்ட சொத்துக்கு யாரோ ஒருவர் அதிக விலை தருவதாகப் பேசிக் கொண்டிருக்கிறார். கையை விட்டுப் போய் விடும். சீக்கிரமாக லீகல் பார்த்துக் கொண்டு வாருங்கள்” என்பார்கள்.

அது அவருக்கு விரிக்கும் வலை என்று அப்போது தெரியாது.

”நல்ல சொத்துங்க, இந்தச் சொத்தை வாங்கியவுடன், அவருக்கு பெரிய வளர்ச்சிங்க, அவருக்கு யாரையும் ஏமாற்றி பிழைக்க வேண்டுமென்ற அவசியமே இல்லைங்க” என்பார்கள்.

ஒருவரை நம்புவது அவரவரைப் பொறுத்தது. ஆனால் சொத்துக்களுக்கான ஆவணங்கள் சரியாக இருக்க வேண்டும். இன்றைக்கு நம்பிக்கைத் துரோகம் தானே உலகெங்கும் நடக்கிறது. இல்லையென்று சொல்ல முடியுமா?

நான் வில்லங்கச் சான்றினையே நான்கு தடவை போட்டுப் பார்ப்பேன். பைமாஷ் நம்பரில் இருந்து கொரலேசன் நம்பர் வரை சரியாக இருக்கிறதா எனப் பார்ப்பேன். ஒவ்வொரு பத்திரத்தையும் படிப்பது மட்டுமின்றி, பக்கத்து காலைகளின் பத்திரங்களை நகல் எடுத்துப் பார்ப்பேன். எல்லாம் சரியாக இருக்க வேண்டும். புல வரைபடம் சரியாக இருக்க வேண்டும். நிலத்தின் தன்மை தெரிய வேண்டும். அதன் கந்தாயங்கள் தெரிய வேண்டும். அதன் வரி விதிப்புகள் பற்றிய தகவல்கள் தெரிய வேண்டும். பக்கத்து நிலத்தின் வில்லங்கங்கள் பார்ப்பேன். இப்படி இன்னும் பலப்பல ஆய்வுகளை பார்ப்பேன். இதெல்லாம் இரண்டு நொடிக்குள் முடியுமா? நிதானத்துடன் ஆய்வு செய்தல் அவசியம். இத்தனை வேலைகளைச் செய்துதான் அச்சொத்து சரியான முறையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என முடிவுக்கு வர முடியும்.

நான் குறிப்பிட்ட பிளாக் வாசகருக்கு அதெல்லாம் நேராது. இந்த வழக்கை எப்படிக் கையாண்டால் வெற்றி பெற முடியும் என்று முடிவெடுத்திருக்கிறேன். என்ன ஒன்று, காலம் தான் ஆகும். நம் விருப்பத்துக்கு கோர்ட்டை செயல்படுத்த வைக்க முடியாது. அது தன் விருப்பத்துக்கு தான் இயங்கும். 

கோர்ட்டின் செயல்பாடுகள் பற்றி நன்கு தெரிந்து கொண்டிருப்பவர்களால் தான் சில உயரங்களை அடைய முடியும். அத்துடன் காவல்துறையினரை ஹேண்டில் செய்யும் அறிவும் தேவை.

எனது வக்கீல் நண்பர்களுடன் தினமும் பல வழக்குகள் பற்றி அதன் தீர்ப்புகளைப் பற்றி விவாதிக்கிறோம். பல விஷயங்களை எழுத முடியாது நண்பர்களே. கோர்ட்டுகள் எல்லாம் சினிமாவில் பார்ப்பது போல இருக்காது. வக்கீல்கள் எல்லாம் விதி படத்தின் கதாநாயகி சுஜாதா போலவோ, நேர் கொண்ட பார்வை அஜித்குமார் போலவெல்லாம் இருக்கமாட்டார்கள். 

உங்களுக்கு ஒரு படத்தைப் பற்றிய செய்தி கீழே. இப்படத்தினைப் பாருங்கள். வக்கீல் தொழிலும், நீதிமன்றங்களும் இயங்கும் லட்சணம் தெரியும்.

எதார்த்தம் வேறு, சினிமா வேறு. காவல்துறையின் செயல்பாடுகள் பற்றி நன்கு தெரிந்து கொண்டவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். சாமானியனுக்கு கோர்ட்டோ, காவல்துறையோ தேவையே இல்லை. ஆனால் ஏதோ ஒரு சூழலில் சிக்கி விட்டால் - ஹேண்ட்லிங்க் தெரிய வேண்டும்.

முக்கியமாக ஒன்று - வக்கீல்கள், நீதிபதிகள், காவல்துறையினர், அரசியல்வாதிகள் எல்லோரும் நம்மைப் போலத்தான். அவர்களுக்கும் நம்மைப் போல எல்லாப் பிரச்சினைகளும் உண்டு.

ஆகவே எதுவாக இருந்தாலும் நல்ல நண்பர்களையும், நல்ல ஆலோசகர்களையும் கூட வைத்துக் கொள்ளுங்கள்.

எனது லிங்க்டு இன் இணைப்பில் பாருங்கள். பல பதிவுகளைப் பதிவு செய்து வருகிறேன். தினமும் நடக்கும் பொருளாதார மற்றும் அதன் தாக்கங்கள் பற்றி ஆங்கிலத்தில் எழுதி வருகிறேன். அதிர வைக்கும் உண்மைகளை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

எந்த வழக்கானாலும் சரி, எந்த லீகல் பிரச்சினையானாலும் சரி - தைரியமாக இருங்கள். மிகச் சரியான வழி உங்களுக்கு கிடைக்கும். 

சொத்துக்கள் வாங்கும் போது கொஞ்சமே கொஞ்சமே கவனமாக இருங்கள். அவ்வளவுதான்.

நலமுடன் வாழ்க...!


Monday, September 9, 2024

நிலம் (115) - வழக்குச் சொத்துக்களைப் பதிவு செய்யலாம் பதிவுதுறை உத்தரவு

09.09.2024 செய்தி தாள்களில், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி, சொத்து விற்பனையை பதிவு செய்ய மறுக்கக்கூடாது எனப் பத்திரப்பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது செய்தி வெளியாகி இருக்கிறது. 

சொத்து தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தால், அதை விற்பது தொடர்பான பத்திரங்களை, சார் பதிவாளர்கள் பதிவு செய்யமாட்டார்கள். இதற்கிடையில் நீதிமன்றம் எவ்வித உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், சொத்து விற்பனையை நிறுத்தக்கூடாது என ஒரு சில வழக்குகளில்  தீர்ப்பு  அளித்திருக்கிறார்கள் நீதிபதிகள். தடை ஆணை இல்லாத நிலையில் வழக்கு நிலுவையில் இருந்தாலும் சொத்து விற்பனையைப் பதிவு செய்யலாம் என பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

அன்பானவர்களே, இதையெல்லாம் நம்பி சொத்துக்களை வாங்கி விடாதீர்கள். நீங்கள் நினைப்பது போல நீதிமன்றங்கள் இல்லை. இந்திய நீதிமன்றங்கள் சிவில் வழக்குகளின் தீர்ப்பினை வாதியின் இறப்புக்குப் பின்பும் வழங்கும் வழக்கம் கொண்டவை.

ஒரு சொத்துத் தொடர்பான வழக்கின் இறுதி தீர்ப்பு இல்லை எனில் அந்தப் பக்கம் திரும்பியே பார்க்காதீர்கள்.

விலை குறைவாக கிடைக்கிறது என ரிஸ்க் எடுக்கிறேன் பேர்வழி என வாங்குகின்றீர்கள் என்றால், உங்களுக்கு நீதிமன்றத்தை கையாளுவதற்கான தகுதி இருக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் வாழ்க்கை சுண்ணாம்புக் கால்வாயில் வைத்த செங்கல் போலாகும். 

கவனமாய் இருங்கள்.

நீதித்துறை இப்போதெல்லாம் முற்றிலும் மாறி விட்டது. வழக்குகளை தாமதிக்க பல்வேறு உபாயங்கள் இருக்கின்றன. வாதியைப் பார்த்தவுடனே உங்களைப் பற்றி முடிவு செய்து விடுகிறார்கள். 

நீதித்துறையின் ஈரல் அழுகி விட்டது. இந்தியாவில் பிழைக்க வேண்டுமெனில் நீங்கள் விக்டிமாக(Victim) இருக்க வேண்டும். ஜூடிசியல் விக்டிம் குற்றவாளியாக இருந்தாலும் அவர்களுக்குத்தான் ஆதரவாய் இருக்கும்.  எழுத சங்கடமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அப்பாவிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இதை எழுதுகிறேன்.

அரசாங்கம் வருவாய் வருவதற்காக சில விதிகளை உருவாக்கும். அதனால் பாதிக்கப்படுவது மக்கள் தான்.  உதாரணமாக மதுக்கடைகளை அரசு நடத்தக்கூடாது எனப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மதுக்குடிப்பது ஒரு தனிமனிதனின் உரிமை என்கிறது சட்டம்.

அரசு மதுக்கடைகளை நடத்தவில்லை என்றால் யார் நடத்துவார்கள்? 

தனியார்தானே....?

தனியாரிடம் மது வாங்கிக் குடித்தால் மக்களுக்கு நோய் வராதா? செத்துப் போக மாட்டார்களா? இதெல்லாம் நடக்கும் தானே?

ஆனாலும் ஏன் ஒரு சில அரசியல்வியாதிகள் மதுக்கடையை அரசு நடத்தக்கூடாது என்று அலறிக் கொண்டிருக்கிறது தெரியுமா? அந்த வியாதிகள் கடைகளை நடத்திக் கொள்ளை லாபம் எடுக்க வேண்டுமென வாயில் ஒழுகும் ரத்தத்துடன் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மதுக்குடிப்பவர்களை குடிக்கக் கூடாது என அரசு கையைப் பிடித்து கட்டியா போடமுடியும்? உடனே வியாதிகள் கத்திக் கூப்பாடு போடுவார்களே...!

அரசின் மதுக்கூடங்கள் வழியாக வரும் மானம் (குடிமக்களின்) - வருவாயாக ஏதோ திட்டங்களுக்கு செலவழிக்கப்படுகிறது என்றொரு பயனாவது கிடைக்கிறது.

அரசு தனி மனிதனுக்காக எதுவும் எப்போதும் செய்யாது. நாம் தான் அரசுடன் இயைந்து இருக்க வேண்டும். அதுவும் தாமரை இலைத் தண்ணீர் போல.

அரசப்பயங்கரவாதம் என்றுக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அரசு விதிகளுக்கு உட்பட்டு இயங்குவதாய் சொல்லிக் கொள்ளும், ஆனால் விதி மீறல்களைச் செய்யும். ஏனென்றால் அரச சட்டங்களை அமல்படுத்துபவர்களும் சாதாரண ஆசா பாசாங்குகளுக்குக் கட்டுப்பட்டவர்கள் தானே.

ஆகவே, வழக்குச் சொத்துக்களை வாங்குவதைத் தவிருங்கள். அரசு மதுக்கடையை வைத்திருக்கிறது என்பதற்காக குடிமகன்கள் எல்லோரும் குடித்தே ஆக வேண்டிய அவசியம் இல்லையே...!!!

வளமுடன், நலமுடன் வாழ்க...!!!

Tuesday, August 13, 2024

கடமையைச் செய்ய வரி கேட்கும் ஒன்றிய அரசு

விடிகாலை நேரம். வெள்ளிங்கிரி மலையடிவாரத்திலிருக்கும் வீட்டின் ஜன்னல் வழியே மேற்கில் உயர்ந்து நிற்கும் பச்சை வண்ண போர்வை போர்த்திய மலையைய் பார்க்கிறேன். மலைகளின் மீது ஆங்காங்கே வெளீரென அருவிகள் தென்படுகின்றன. ரோசா செடியில் மொட்டு விரியவில்லை. ரூடோஸ் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கிறாள். பரிமளாவைக் காணவில்லை. எங்காவது படுத்திருப்பாள். 

சிந்தனை இரண்டு நாட்களுக்குப் பின்னால் சென்றது.

ரேசன் கடை ஊழியர் கைரேகை மிஷினைக் கொண்டு வந்து கொடுத்தார். பல வகைகளில் ரேகையைப் பதிவு செய்ய முயன்ற போது எடுத்துக் கொள்ளவில்லை. ஆகவே கண் மற்றும் ரேகைகளை மீள்பதிவு செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றேன். அரசு சேவை மையம் என்று குறிப்பிட்டிருந்த பகுதிக்குச் சென்றேன். ஒரு அரசு அலுவலகம் இவ்வளவு குப்பையாக கூட இருக்குமா? என்று நினைக்கும் அளவுக்கு ஒட்டடையும், தூசியும், உடைந்த நாற்காலிகளும், ஆங்காங்கே பிரிந்து தொங்கிய மின் வயர்களுமாய் - பேய் பங்களா போலக் காட்சி அளித்தது.

100 நாள் பணி செய்யும் திறமையானவர்களைக் கொண்டு, அரசு அலுவலங்களை சுத்தப்படுத்தலாம். மெருகுபடுத்தலாம். அவர்களை வைத்து அரசு அலுவலகங்களுக்கு வருபவர்களை நெறிப்படுத்தலாம். தமிழ் நாடு அரசு இதுபற்றி சிந்திக்க வேண்டுகிறேன்.

சேவை மையத்தில் இருந்த பெண்ணிடம் கைரேகை அப்டேட் செய்ய வேண்டுமென்று கேட்ட போது, வேண்டா வெறுப்பாய் ’உட்காருங்க, அழைக்கறேன்’ என்றார்.

100 ரூபாய் கேட்டார்.

வரி 18% சதவீதம். ஆதார் கார்டு அப்டேட்டுக்கு வரியுடன் சேர்ந்து 100 ரூபாய். இந்தக் கட்டணமும் அரசுக்குத்தான் செல்கிறது. இதற்கு ஒரு வரியைப் போடுகிறது. வரியும் அரசுக்குத்தான் செல்கிறது.

ஆதார் கார்டை முழுமூச்சாக எதிர்த்தவர்கள் இப்போது எதற்கெடுத்தாலும் ஆதாரைக் காட்டு என்கிறார்கள் என்பது நகைமுரண்.

ஆதார் அட்டையை அத்தியாவசியமான சான்றாக மாற்றிய அரசு, ஆதாரில் அப்டேட் செய்வதைக் கூட மக்களுக்கு வரி விதிக்காமல் செய்யகூடாதா?

அரசாங்கம் மக்களுக்கு வழங்க கூடிய அடிப்படையான சேவை அல்லவா ஆதார்? தன் குடிமக்களுக்கு அடையாள அட்டை வழங்க கூட வரி வாங்க வேண்டுமா? இப்படியும் ஒரு வரியா? 

பிரிட்டிஷ் காலனி ஆட்சியில் கூட இப்படியான வரியை பிரிட்டிஷார் விதிக்கவில்லை.

இந்திய மக்களின் மீது கடுமையான வரிக் கொடுமையை ஒன்றிய அரசு செய்து வருகிறது. 

இத்தனை வரி வாங்கியும் இந்தியாவின் வெளி கடன் தொகை 663 பில்லியன் டாலர் என்கிறது ஆர்.பி.ஐ.

இதுதான் மக்கள் சேவையா? 

Wednesday, July 10, 2024

போன் கட்டண விலையேற்றம் - உண்மை என்ன?

ஜூலை 4 முதல் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் போன் ரீஜார்ஜ் மற்றும் கட்டணங்களை சுமார் 27 சதவீதம் அளவுக்கு விலையை உயர்த்தின. பலரும் கண்டனம் தெரிவித்தார்கள். முகேஷ் அம்பானியின் மகன் திருமணத்திற்காக கட்டணங்கள் உயர்த்தப்பட்டன என சோஷியல் மீடியாக்களில் பேசினார்கள். பிஜேபி தோற்றதற்காக இந்திய மக்களை பழிவாங்குவதற்காக இந்த நிறுவனங்கள் விலையை உயர்த்தின எனவும் பேசினார்கள். 

அரசியல், பழிவாங்கல் என்பதெல்லாம் பொதுமக்களின் பொதுப்பார்வை. இதற்குப் பின்னால் ஒரு மர்ம முடிச்சு உள்ளது. அது என்னவென்று பார்ப்போம்.

ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் லாபத்திற்காகத்தான் உருவாக்கப்பட்டன. பொதுமக்கள் பயன்படுத்தும் தொலைத்தொடர்பு துறையில்  நிறுவனங்கள் முதலீடு செய்து விட்டு, இலவச சேவை செய்யமாட்டாரகள். லாபம் ஒன்றே அவர்களின் நோக்கம்.

இந்த நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு சொத்துக்கள் இருக்கும். அதை மூலதனமாக வைத்து தொழிலை ஆரம்பித்து, தங்களின் நிறுவனத்தை உருவாக்கி இருப்பார்கள். இந்த நிறுவனங்களுக்கு வங்கியில் கடன் இருக்கும். இந்தப் பணம் பொதுமக்களின் பணம். வங்கியில் இருக்கும் பணத்தை வட்டிக்குக் கொடுத்து, வங்கிகள் சம்பாதிக்கின்றன.

அடுத்து, பங்கு வர்த்தகத்தில் இவர்களின் நிறுவனம் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இந்த நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கும் என்பதால் பல முதலீட்டாளர்கள் இந்த நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்திருப்பார்கள்.

இதற்கிடையில் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கான சம்பளங்கள், அவர்களுக்கான சம்பள உயர்வுகள் மற்றும் இதர கட்டணங்கள், உயர்ந்து வரும் விலைவாசிக்கு ஏற்ப நிர்வாகச் செலவுகள், கண்ணுக்குத் தெரியாத தொழில் போட்டியாளர்களைச் சமாளிப்பதற்கான செலவுகள், நடை முறைச் செலவுகள் என பல வகையான செலவுகளும் உண்டு.

இதையெல்லாம் சமாளித்து நிறுவனத்தை லாபத்தில் கொண்டு செல்ல வேண்டும். இதில் ஒரு இணைப்பு துண்டிக்கப்பட்டால் இழப்பது நிறுவனங்கள் மட்டும் அல்ல. இந்திய மக்களின் வரிப்பணம் மற்றும் அவர்களின் முதலீடுகளும் இழக்கப்படும். இந்த நிறுவனத்தில் வேலை செய்பவர்களோ, ஷேர்கள் வைத்திருப்பவர்களோ கட்டண உயர்வை சரி என்பார்கள். ஏனெனில் அவர்கள் இந்த நிறுவனத்துடன் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் பொதுமக்களுக்கு கட்டண உயர்வு என்பது நஷ்டம். இவர்களுக்கு பெருத்த லாபமில்லை, ஆனால் நிறுவனம் லாபத்தில் இயங்க வேண்டும். அப்போதுதான் இவர்களால் பிழைக்க முடியும். இது அரசுக்குத் தெரியும். ஆகவே அவர்கள் வாய் மூடிக் கொள்வார்கள்.

போன் கட்டணம் உயர்ந்து லாபம் ஏற்பட்டால், இந்த நிறுவனங்களின் மீது முதலீடு செய்திருப்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். இந்த நிறுவனங்கள் நஷ்டம் அடைந்தால் முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்படும். அதுமட்டுமல்ல வேலை இழப்பு உண்டாகும். பணியாளர்கள் நிறுவன சம்பளத்தை வைத்து வீட்டுக்கடனோ அல்லது கார்கடனோ எதுவோ வாங்கி இருப்பார்கள். வேலை இழந்தால் வங்கி ஜப்தி செய்து விடும். வங்கிக்கு இழப்பு உண்டாகும். இப்படி ஒரு சிக்கலான ஆனால் அவசியமான பொருளாதாரப் பிணைப்புகள் மக்களுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையில் உண்டு.

இதையெல்லாம் விட்டு வெளியேற முடியாது. இது தான் பொருளாதாரச் சங்கிலி. கட்டண உயர்வை நிறுத்தி வைக்க உத்தரவிட, நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் முடியும். ஆனால் சிஸ்டம் அதைச் செய்ய அனுமதிக்காது. ஏனெனில் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியில் இருப்பவர்களுக்கு இந்த நிறுவனங்கள் கண்ணுக்குத் தெரியாத வகையில் செலவு செய்திருப்பார்கள். அவர்களுக்கு மக்களை விட நிறுவனங்களின் சாமர்த்தியம் தான் முக்கியமானது. மக்கள் எப்போதும் கட்டண உயர்வை எதிர்ப்பவர்கள். எதிராய்ப் பேசுவார்களே தவிர வேறு ஒன்றையும் மக்களால் செய்ய முடியாது என அரசுகளுக்கும், நிறுவனங்களுக்கும் தெரியும்.

இதற்கெல்லாம் ஆதாரங்கள் உள்ளனவா என்று நீங்கள் கேட்பீர்கள் எனத் தெரியும். இதோ கீழே த ரிப்போர்ட்டர்ஸ் கலெக்ட்வ் இணையதளம் வெளியிட்டுள்ள செய்திகள்.



மேலே இருக்கும் படங்களின் செய்திகள் இணைப்பு கீழே இருக்கிறது. இணைப்பைச் சொடுக்கி, படித்துக் கொள்ளுங்கள். ( Thanks : The Reporters Collective)


ஒவ்வொரு அரசுக்கும் மக்கள் நலன்கள் மீது அக்கறை இருக்காது. ஏனெனில் மக்கள் தேசமெனும் சங்கிலியில் கட்டப்பட்டிருக்கிறார்கள். நீங்கள் வரி கொடுத்தே ஆக வேண்டும். விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நீங்கள் உழைத்து சம்பாதிக்கும் பணத்தில் இருந்து அரசுகள் வரிகளைப் பிடுங்கிக் கொள்ளும். அதை உங்களால் நிறுத்த முடியாது. 

நாட்டின் நலன் முக்கியமாகும் போது, மக்களின் நலன் தியாகமாக்கப்படும். இதுதான் எல்லைகளுக்குள் உட்பட்ட ஒரு நாட்டில் வசிக்கும் மக்களின் எதார்த்த நிலை. நீங்கள் இந்தப் பூமியில் ஓரளவு சுகமாக வாழ வேண்டுமெனில் வரி கட்ட வேண்டும். எனக்கு அதெல்லாம் தேவையில்லை என்றால் பைத்தியமாக சாலைகளில் திரியலாம். அதற்கு மட்டும் அரசு அனுமதி உண்டு. பட்டினியாக கிடக்கலாம். அரசு ஏனென்று கேட்காது. அது தனி மனித சுதந்திரத்துக்குள் வந்து விடும்.  அனாதைகள், நாடோடிகள், பிச்சைககாரர்கள் ஆகியோரைப் பற்றி அரசுகள் எப்போதும் கண்டுகொள்வதில்லை. ஆனாலும் பல திட்டங்கள் இருக்கும். இருந்தாலும் அதையெல்லாம் அரசுகளால் நிர்வகிக்க முடியாது. அரசியலமைப்புச் சட்டத்தின் தன்மை அது. 

ஆகவே கட்டண உயர்வுகளை ஏற்றுக் கொண்டு, விதியேன்னு வாழ பழகிக் கொள்ள வேண்டும். யாரும் எதுவும் செய்யவும் மாட்டார்கள், செய்யவும் முடியாது.

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் உருவான கட்டமைப்பு என்ன தெரியுமா? இனி ஒரு அம்பானி, அதானி உருவாக முடியாது. அம்பானி ஒரு கட்சி என்றால் அதானி இன்னொரு கட்சியினால் வளர்க்கப்பட்டவர்கள். அரசியல் நடத்த இவர்கள் தேவை. இல்லையென்றால் நம்மிடம் எந்தக் கட்சியும் அரசியல் செய்ய முடியாது. நமது டிசைனுக்கு ஏற்றவாறு தான் கட்சிகளும் இருக்கும்.

அரசியல் என்றால் என்ன? மக்களுக்கு நாங்கள் நன்மை செய்வோ, மக்களின் வாழ்க்கையை உயர்த்தி, நல்ல நிலையில் வாழ வைப்போம், நாட்டை உயர்த்துவோம் என்பதுதான்.

ஆனால் இங்கு நடப்பது என்ன? எல்லாமே தலைகீழ் அல்லவா? இதுதான் எதார்த்தம். ஆகவே வாழப்பழகிக் கொள்ளுங்கள். 

நீங்கள் யாரும் உங்கள் வாழ்க்கையை வாழ்வதே இல்லை. நீங்கள் வாழ்வது அதிகார மிக்கவர்களால் உருவாக்கப்பட்ட வாழ்க்கை டிசைனுக்குள். உங்களுக்கு என தனிப்பட்ட வாழ்க்கை இங்கு இல்லவே இல்லை.

வளமுடன் வாழ்க.

10.07.2024

Tuesday, July 9, 2024

விதியே மதியா? சிலிர்க்க வைக்கும் ஓர் நிகழ்வு

அம்மணியின் மாதாந்திர செக்கப்புக்காக கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கு மூன்று மணி வாக்கில் உடன் சென்றிருந்தேன். ஒரே சத்தம். காதில் ஏர்போட்ஸ் மாட்டிக் கொண்டு, செக்கான் என்ற மலையாளப் படத்தில் மணிகண்டன் பெரும்பாடப்பு பாடிய பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தேன். ஜூலை மாத காலச்சுவடு இதழைப் பிரித்தேன். பாட்டுக் கேட்டுக் கொண்டே படிப்பதில் எனக்கு அலாதி இன்பம்.

காலச்சுவடு இதழில் புத்தகப் பகுதியில் இசை எழுதிய ஒளவையாரின் கவித்துவ திரட்டு எனக் குறிப்பிட்டு வெளி வரப்போகும் ”களிநெல்லிக்கனி” என்ற புத்தகத்திலிருந்து ஒரு சில பகுதிகளை வெளியிட்டிருந்தார்கள்.  மூன்று வரிகள் கீழே.

// “விதியே மதி” என்கிறது ஒரு பாடல். துயர் பெருகி நிறையும் ஒரு வரி அது. எனில், எனக்கு இங்கு என்னதான் வேலை? என் குட்டிக்கரணங்களுக்கு என்னதான் பொருள்? நான் திட்டங்கள் தீட்டுகையில் பறக்கும் தீப்பொறி என்னுடையதில்லையா பாட்டி? // (நன்றி : காலச்சுவடு)

இசை கேட்டிருக்கும் இந்தக் கேள்வி நியாயமானதாகத் தோன்றியது எனக்கு. விதியே மதி எனில் வாழ்க்கையை சுலபமாகக் கடக்கலாமே என்றெல்லாம் எனக்குள் கேள்விகள் எழுந்தன.

செக்கான் பாடல் எனக்குள் ஒரு விதமான மோன நிலையைக் கொண்டு வந்தது. சிந்தனையற்று பாடலின் இசைக்குள் மூழ்கி இருந்தேன்.

அந்தப் பாடலை நீங்களும் கேளுங்கள்.


நிற்க.

ஒரு பிரபல அரசியல்வாதியால் ஞானி என்று புகழப்பட்டவர் எனது நண்பர். அவருக்கு ஏதோ பிரச்சினை. ஏதோ நினைவில் காரை எடுத்துக் கொண்டு அவர் தனியாக தங்கி இருக்க முயன்ற இடங்களுக்குச் சென்ற போதெல்லாம் ஏதேதோ தடைகள் வந்து, ஒரு வழியாக கோவைக்கு வந்து சேர்ந்தார். மதியம் போல வீட்டுக்கு வந்தார். 

ஜோதி சுவாமியைப் பார்க்க வேண்டுமென்றார். மாலையில் நானும் அவரும் சுவாமியைச் சந்திக்க கோசாலைக்குச் சென்றோம். 

குளிர்காற்று வீசிக் கொண்டிருந்தது. சூரியனும் குளிருக்கு நடுங்கி மேகங்களைப் போர்வையாக்கி மூடிக் கொண்டிருந்தான். வெள்ளிங்கிரி மலைகளில், தலையில் ஆங்காங்கே எட்டிப் பார்க்கும் வெண்ணிற முடி போல அருவிகள் கோடுகளாய் தெரிந்தன. பறவைகளின் சத்தம் ஆங்காங்கே கேட்டுக் கொண்டிருந்தன. கோசாலையில் ஏதோ ஒரு பசுங்கன்று ‘மே...மே’ என்று கத்தி அம்மாவைத் தேடிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் ஆசிரமத்திலிருந்து ஜோதி சுவாமி வந்தார். அவர் அப்போது மவுனத்தில் இருந்தார்.

நண்பர் சுவாமியிடம் தனது பிரச்சினைகளைப் பகிர்ந்தார். 

நானும் நண்பரும் ஜே.கிருஷ்ணமூர்த்தியை விரும்பிப் படிப்பவர்கள். நண்பர் பொருளாதாரத்தில் நிபுணர். உலகளவில் பெரும் புகழ் பெற்ற பொருளாதார ஆலோசகர்.  திருவண்ணாமலை ரமணர் மீது பக்தி கொண்டவர். 

நானும் அவரும் அடிக்கடி பல விஷயங்களைப் பற்றிப் பேசுவோம். அவரிடமிருந்து நான் கற்றது ஒன்று. பிரிவினை எதிலும் வேண்டாம் என்பார். அதன் அர்த்தம் எனக்குள் புதைந்து விட்டது. யாருடனும், எதுவுடனும் பிரிவினை அற்று இருப்பது என்பது துண்டிக்கப்பட்ட இயற்கையின் இழையோடு மனிதன் இசைவு கொள்ளும் நிலை அது. 

ஓஷோ மற்றும் ஜலாலுதீன் ரூமி, சூஃபிசம், ஜென் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பதால், கோவில்களுக்குச் செல்வதை நான் நிறுத்தி விட்டேன். அவரும் கூட அப்படித்தான்.

உருவ வழிபாட்டிலிருந்து விடுபட்டே ஆக வேண்டுமென்பதால் உள்ளுக்குள் உன்னைத் தேடு என்பதில் எனக்கு பெரும் அவா. அதற்காக எனது குருநாதர் வெள்ளிங்கிரி சுவாமி அருளிய “பேச்சைக் குறைத்து மூச்சைக் கவனி”யில் இருப்பவன். ஏதோ ஒரு சில நொடிகளில் ”நானை” இழக்கும் தன்மையில் இருக்கிறேன். அந்த நொடியில் நானுக்கும், அதை இழப்பதற்குமான பெரும் போராட்டத்திலிருந்து வெளியேற முடியாமல் தவிப்பவன். 

மனிதனுக்குள் எப்போதும் ஒரு ஆய்வு சிந்தனை இருந்து கொண்டே இருக்கும். அதனால் தான் அவன் அறிவியலில் இறைவன் பற்றிய மர்மத்தின் முடிச்சை அவிழ்க்க முனைந்து கொண்டிருக்கிறான்.

எனக்கும் அதே எண்ணம் தான். ஆய்வு மன நிலை. எனக்குள் ஒரு கேள்வி சலசலவென ஓடை போல சத்தமிட்டுக் கொண்டே இருந்தது. அது என்ன கேள்வி எனத் தொடர்ந்து படியுங்கள் தெரிந்து கொள்ளலாம்.

நண்பர்களே, ஓடை சத்தமிடுவதில்லை, தண்ணீரும் சத்தமிடுவதில்லை. 

கற்களுக்குள்ளும், தடைகளுக்குள்ளும் சென்று வெளியேறும் போது உண்டாவதினால் ஏற்படுவதே சலசலப்பு சத்தம் அல்லவா?

பிரச்சினைகளுக்குள் சிக்கிக் கொள்ளும் மனிதனின் மனத்துக்குள் எழும் துன்பத்தின் விளைவாக பிதற்றுவதும் சத்தம் தானே?

நண்பரிடம் ஜோதி சுவாமி ஒரு சிவலிங்கத்தையும், அத்துடன் ஒரு நாகத்தையும் ஆற்றங்கரையோரம் நிறுவி பூசை செய்யுங்கள் என்று சொன்னார். ஏன் அவ்வாறு சொன்னார் என்பதற்கான காரணம் நண்பருக்கும் சுவாமிக்கும் மட்டுமே தெரியும் என்பதால் காரணத்தை விடலாம். 

திருப்பூர் அருகிலுள்ள திருமுருகன் பூண்டியில் சிவலிங்கமும், நாகமும் தயாராகி விட்டது. ஆற்றங்கரையோரம் நிறுவி பூசை செய்ய வேண்டுமே என்பதற்காக திட்டமிடல் செய்தார். ஓரிடத்தில் நிறுவ திட்டமிட்டு அதற்கான பீட வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் போது, ஒரு அரசியல்வியாதி அதை தடுத்திருக்கிறான். அதனால் வேறு பகுதியில் நிறுவ இடம் தேடி, அழகான அற்புதமான இடத்தில், வில்வமரத்தடியில் சிவலிங்கத்தையும், அருகில் நாகத்தையும் நிறுவி பூசை செய்து விட்டார்.

( நண்பர் நிறுவிய சிவலிங்கமும், நாகமும்)

ஏழு வரிகளில் விவரிக்கப்பட்ட இந்த நிகழ்வின் பின்னால் உள்ள உணர்வுகளை விவரிக்க முடியாது. சொற்களின் வழியாக மனிதனின் உணர்வுகளை முழுமையாக கடத்த முடியாது.  எழுத்துக்குள் மூழ்கும் போக்கு இப்போதெல்லாம் எவரிடத்தில் காண முடியவில்லை. சொற்களுக்குள் வாசம் செய்வது ஒரு மோன நிலை. சிவலிங்கத்தை நிறுவ நண்பர் பெரும் போராட்டத்தை நிகழ்த்தினார்.

சரி, ஏன் இந்தப் பதிவு என்பதற்கான காரணத்தைப் பார்க்கலாம்.

தற்போது சிவலிங்கம் இருக்கும் கோவிலின் பூசாரி - நான்கைந்து நாட்களுக்கு முன்பு - கோவிலில் சிவலிங்கம் ஒன்று பிரதிஸ்டை செய்ய வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தாராம். அவரைச் சந்திக்க வந்த எவரோ ஒருவர், உன்னைத் தேடி ஒருவர் வருவார் என்று மட்டும் சொல்லி சென்றிருக்கிறார்.

இந்த நிகழ்வினை நண்பர் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்த போது, சிரித்து விட்டேன். நண்பருக்கு நான் ஏன் சிரித்தேன் என்று புரியவில்லை. அவரிடம் விளக்கம் சொன்னேன்.

காலச்சுவட்டில் நான் படித்த ‘விதியே மதி’ நினைவுக்கு வந்து விட்டது. மனிதனின் செயல்கள் ஒவ்வொன்றும் முன்பே நிர்ணயிக்கப்பட்டது என்பார் ஜோதி சுவாமி. ஒரு மனிதன் கை அசைத்தலும் கூட முன்பே நிர்ணயிக்கப்பட்டது என்பார் கூடுதலாக. அப்போதெல்லாம் இதென்ன கூத்து என நினைத்துக் கொள்வேன்.

ஜோதி சுவாமியும் நானும் ஆற்றுக்குள் குளிக்கச் செல்வதுண்டு. அப்போது மண்ணில் நானொரு சிவலிங்கத்தை உருவாக்குவேன். சுவாமி இலைகள் மற்றும் மலர்களைக் கொய்து வந்து தருவார். நீர் சொட்டும் நிலையில் ஆற்றங்கரையோரமாய் மண்ணால் உருவான சிவபெருமானுக்கு வழிபாடு செய்வது வழக்கம். குளித்து விட்டு வந்து விடுவோம்.

பரிகாரமாய் இருக்கும் நிலையில் சுவாமி ஏன் சிலை செய்யச் சொன்னார்? என்றொரு கேள்வி எனக்குள் இருந்து கொண்டே இருந்தது.

அவ்வப்போது ஒளவையாரின் ‘விதியே மதி’ என்ற வார்த்தைகளும் உள்ளே ஓடிக் கொண்டிருந்தது.

நண்பர் பூசாரியின் விருப்பத்தைப் பற்றி என்னிடம் சொன்ன போது, என்னை அறியாமல் சிரித்து விட்டேன்.  எழுத்தாளர் இசை கேட்டிருந்த கேள்விக்கு விடையும் கிடைத்தது.

எழுத்தாளர் இசை கேட்டிருந்த கேள்விக்கு பதில் இதோ...!

இசையின் கேள்வி :

// “விதியே மதி” என்கிறது ஒரு பாடல். துயர் பெருகி நிறையும் ஒரு வரி அது. எனில், எனக்கு இங்கு என்னதான் வேலை? என் குட்டிக்கரணங்களுக்கு என்னதான் பொருள்? நான் திட்டங்கள் தீட்டுகையில் பறக்கும் தீப்பொறி என்னுடையதில்லையா பாட்டி? // (நன்றி : காலச்சுவடு)

இதற்கான பதில் : குட்டிக்கரணங்களும், திட்டங்கள் தீட்டுவதும் விதியே....!

நண்பர்களே, இந்த நிகழ்வின் பின்னாலே இருக்கும் மர்மத்தைப் பற்றிப் பார்க்கலாம்.

பூசாரியின் விருப்பத்துக்காகவா என் நண்பருக்கு பிரச்சினை உண்டானது?

அதற்காகவா சென்னையிலிருந்து கிளம்பிய அவரை, வேறு எங்கும் தங்க விடாமல் என்னை நோக்கி வர வைத்தது?

பூசாரியின் விருப்பத்துக்காகவா இல்லை நண்பரின் பிரச்சினை தீர்வதற்காகவா ஜோதி சுவாமியைச் சந்தித்தார்? இதில் எது சரியானது? நண்பரின் பிரச்சினையா? பூசாரியின் விருப்பமா? 

நண்பர் பிரச்சினையிலிருந்து விடுபட சிவலிங்கம் தயரானதா? இல்லை பூசாரியின் விருப்பத்திற்காக தயாரானதா?

இவ்வாறு கேள்விகள் எழுகின்றன அல்லவா?

இந்தக் கேள்விக்கெல்லாம் பதில் என்ன? 

விதியே மதி...!

ஒளவையார் பாட்டி சும்மா எழுதி வைக்கவில்லை. 

வளமுடன் வாழ்க ...! (இலக்கணப்படி இப்படித்தான் சொல்ல வேண்டுமாம்)

மீண்டும்

வளமுடன் வாழ்க..!

09-07-2024

* * *

Monday, July 1, 2024

நரலீலைகள் (16) - இந்தியர்களுக்கு தேர்தல் வெற்றிப் பரிசு

இதையெல்லாம் சாதாரணமாக கடந்து போய் விட வேண்டும்.  இப்படியான செய்திகள் ஒரு சில நாட்களுக்கு மட்டும் பாதிப்பை உண்டாக்கும். பின்னர் வழமைபோல கடந்து சென்று விடுவோம் என்பதை நினைவில் நிறுத்துக - நாவல் ஆசிரியர்.

இனி செய்தி ...!

ஜூலை 2015 - ஜூன் 2016 மற்றும் அக்டோபர் 2022 - செப்டம்பர் 2023 ஆகிய ஏழு ஆண்டுகளில்  கார்ப்பரேட் அல்லாத - உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ள 18 லட்சம் நிறுவனங்கள் முற்றாக காணாமலே போயிருக்கின்றன. 54 லட்சம் வேலைகள் பறிபோயுள்ளன. 2015 - 2016 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட தேசிய புள்ளியியல் துறையின் 73வது சுற்று சர்வே விபரங்களுடன் ஒப்பிடப்பட்டு இந்த புதிய விபரங்கள் வெளி யிடப்பட்டுள்ளன.  2015-2016 காலக்கட்டத்தில் கார்ப்பரேட் அல்லாத உற்பத்தி நிறுவனங்கள்  1.97கோடி நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. 2022 - 2023 காலத்தில் 1.78கோடியாக குறைந்துள்ளது.  9.3 சதவீத வீழ்ச்சி ஆகும்.  வேலை செய்து வந்த  தொழிலாளர்களின் எண்ணிக்கை 3.60 கோடியிலிருந்து 3.06 கோடியாக - கிட்டத்தட்ட 15சதவீதம்  வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 

கார்ப்பரேட் அல்லாத சிறு தொழிற்சாலைகள், தனிநபர் உரிமையாளராக இருந்து நடத்தும் தொழிற்சாலைகள், கூட்டுச்சேர்ந்து நடத்தும் தொழிற்சாலைகள் மற்றும் முறைசாரா துறை சார்ந்த பல்வேறு உற்பத்தி தொழிற்சாலைகள் தான் மிக அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களுக்கு வேலை வழங்கி வருபவை. 

ஈவிரக்கமில்லாமல் அமலாக்கிய பணமதிப்புநீக்கம், ஜிஎஸ்டி மற்றும் திட்டமிடப்படாத கோவிட் பொதுமுடக்கம் ஆகியவற்றால் சிறு, குறு, நடுத்தர தொழிற்துறையையும், கார்ப்பரேட் அல்லாத நிறுவனங்களையும் நிலைகுலைந்தன. இன்று வரையிலும் இந்த நிறுவனங்களால் விடுபட முடியவில்லை. இவ்வாறு தீக்கதிர் 30 ஜூன்,2024 தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாமானிய மக்கள் வேலையிழப்பினாலும், உயராத சம்பளத்தினாலும், கடுமையாக உயர்ந்த விலைவாசிகளாலும் பாதிக்கப்பட்டு நொந்து வேதனையில் உழல்கின்றனர்.



இந்திய தொலைத்தொடர்புத் துறையில் தனி ஆதிக்கம் செலுத்தி வரும் ஜியோ, ஏர்டெல் மற்றும் வி.ஐ ஆகிய தனியார் நிறுவனங்கள் - புதிய அரசு அமைந்தவுடன் முன்பிருந்த தொலைபேசிக் கட்டணத்தை 28 சதவீதம் வரைக்கும் உயர்த்தியுள்ளது. தேர்தல் வரைக்கும் மூச்சே காட்டாமல் இருந்த நிறுவனங்கள், மக்களின் அத்தியாவசிய தேவையாக மாறிப்போன தொலைபேசிக் கட்டணத்தை உயர்த்தி - தேர்தல் வெற்றிப் பரிசாக வழங்கி இருக்கின்றன.

யாரும் எதுவும் செய்ய முடியாது. அவர்கள் கேட்ட தொகையைக் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் இந்தியர்கள். தனியாருக்கு நிகராக பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை அரசு வளர்க்கவில்லை. 

இந்திய மக்களுக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கிய பரிசைக் கீழே பாருங்கள். தேர்தலுக்குப் பிறகான வெற்றிப் பரிசை மகிழ்ச்சியோடு அனுபவியுங்கள்.

கேட்கக்கூடாத கேள்வி : தேர்தலுக்கு இந்த நிறுவனங்கள் ஏதும் டொனேசன் கொடுத்து இருக்குமோ என்றெல்லாம் கேள்விகள் மனதுக்குள் எழவே கூடாது. இது தொழில் நிமித்தமான விலை உயர்வு. அடுத்த வருடம் இலவச அழைப்புகள் நீக்கப்படுமோ என்ற கேள்வியும் எழக்கூடாது. 

வாழ்த்துகள்.



இத்துடன் கட்டுரை முடிந்தது.

விரைவில் அசாசிலின் ராதையுடனான காதல் தொடரும்...!